புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம்- மேற்பனைக்காடு, ஆலடிக்கொல்லை பிரிவு சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடையில் செவ்வாய்க் கிழமை காலை, ஒருபையில் அழகான ஆண்குழந்தை இருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகக் குழந்தையை மீட்டு அதிகாரிகள் மூலம் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து குழந்தைகள் நல அலுவலர்கள் குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குழந்தையை நிழற்குடையில் வைத்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கீரமங்கலம் தெற்கு வட்ட கிராம நிர்வாக அலுவலர் புஜ்பராஜ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலிசார் இந்தப் புகார் குறித்து விசாரனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்தக் குழந்தை விராலிமலைத் தொகுதியில் உள்ள அன்னவாசல் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்குப் பிறந்த குழந்தையாக இருக்கலாம் என்றும் அதுபற்றி போலிசார் விசாரனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுக்கோட்டையில் இயங்கும் 'துணைவன்' அமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
அவர்கள் கொடுத்த புகாரில், 15 வயது சிறுமியை 21 வயது இளைஞர் ஒருவர் ஏமாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், அதன் விளைவாகக் கடந்த வாரம் மருத்துவமனையில் பிறந்த குழந்தையை 70கி.மீ.க்கு அப்பால் உள்ள கீரமங்கலத்து நிழற்குடையில் வைத்துச் சென்றிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இந்தப் புகாரையடுத்து போலிசார் தீவிர விசாரனையை மேற்கொண்டுள்ளனர்.