Skip to main content

’18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் நீதிமன்றத்தை நாடி இழுத்தடிக்க நினைப்பது தமிழக மக்களுக்கு நல்லதல்ல’-ஈஸ்வரன்

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
es

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
’’18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு தமிழக அரசிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாதென்பது தெரிந்ததுதான். தீர்ப்பை ஒவ்வொருவரும் மாறுபட்ட கோணத்தில் பார்த்தாலும், விமர்சித்தாலும் இது அரசியல் விளையாட்டு என்பதுதான் உண்மை. நீதிமன்றத்தின் தீர்ப்பை காட்டிலும் மக்கள் மன்றத்தின் தீர்ப்புதான் சக்தி வாய்ந்தது. நீதிமன்றத்திலே வழக்கை போட்டுவிட்டு தொடர்ந்து மக்களை குழப்புகின்ற விதத்தில் அறிக்கை போர்கள் நடப்பதால் யாருக்கு லாபம். 18 சட்டமன்ற தொகுதிகள் உறுப்பினர்கள் இல்லாத தொகுதிகளாக நீண்ட நாட்களாக தொடர்ந்து அந்தந்த தொகுதி மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது.

 

 ஜனநாயகத்தில் மக்களின் உரிமைகளை பாதுகாப் பதற்காகதான் நீதிமன்றங்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் மக்கள் யாரோடு இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்கிற்காக மட்டுமல்ல பிரதான தலைவர்கள் தமிழக அரசியல் களத்தில் இல்லாத சூழ்நிலையில் மக்கள் யாரோடு இருக்கிறார்கள் என்பதை ஜனநாயகம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த 18  தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதன் மூலமாகதான் தமிழக மக்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். 

 

தமிழகத்தில் இருக்கின்ற எல்லா தலைவர்களும் பெரும்பான்மையான மக்கள் தங்களோடுதான் இருக்கிறார்கள் என்று சுயதம்பட்டம் அடித்து கொண்டிருக்கின்ற வேளையில் உண்மை தெரிய வேண்டும். பல அரசியல் பிரச்சினைகளுக்கும், ஜனநாயகத்தில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களுக்கும் அதுதான் தீர்வாக இருக்கும். மேல்முறையீடுகள் செய்து நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு காத்திருப்பது என்பது மக்களை சந்திக்க தயக்கம் என்று பொருள்படும். இந்த சூழ்நிலையில் மக்கள் மன்றத்திற்கு ஒரு வாய்ப்பளித்து மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்ற மனநிலை அனைவருக்கும் வர வேண்டும். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் நீதிமன்றத்தை நாடி இழுத்தடிக்க நினைப்பது சில அரசியல் தலைவர்களுக்கு லாபமாக இருக்கலாம். ஆனால் தமிழக மக்களுக்கு நல்லதல்ல.’’

 

சார்ந்த செய்திகள்