Skip to main content

பா.ம.க.வினர் போராட்டத்தில் பொதுச் சொத்துகளுக்கு சேதம்: அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

highcourt chennai pmk

 

சென்னையில் பா.ம.க.வினர் நடத்திய போராட்டத்தில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, புதன்கிழமை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது, பத்திரிக்கையாளர் வாராகி தரப்பில், "வன்னியர் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி, சென்னையில் செவ்வாய்க்கிழமை  போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ம.க.வைச் சேர்ந்த பலர் வாகனங்களில் சென்னைக்கு வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார், திரும்பிச் செல்லும்படி கூறினார். இதனால், ஆத்திரமடைந்த பாமகவினர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

பேருந்து மற்றும் ரயில் மீது கற்களை வீசி, பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தினர். எனவே, போராட்டத்தை நடத்திய வன்னியர் சங்கத்தைத் தடை செய்ய வேண்டும். போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி, மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" எனவும் முறையிடப்பட்டது. மனுவாகத் தாக்கல் செய்தால், எந்த அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதைப் பதிவுத்துறை முடிவெடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்