![Boy who cheated girl.. police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/IGu0nrwEY8N_wTYC95NKSFl4eeRFrJAS5HNX6WgZLKs/1657878293/sites/default/files/inline-images/th_2815.jpg)
கரூர் மாவட்டம், சிந்தாமணிபட்டி பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவியை, சசிகுமார் எனும் இளைஞர் காதலித்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், இவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதத்தில் மாணவி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என சசிகுமாருக்கு தெரியவந்துள்ளது. அதனால், சசிகுமார் தனது மனைவியை விட்டு பிரிந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கரூர் மாவட்ட எஸ்.பி.யிடம் அந்த மாணவி புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க குளித்தலை டி.எஸ்.பிக்கு மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தினார். ஆனால் டி.எஸ்.பி, புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அந்த மாணவி, மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன்பு தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கவும், திருமணம் செய்த பிறகு சமூகத்தைக் காரணம் காட்டி ஏமாற்றிய சசிகுமார் மீதும் வழக்கு பதியக்கோரி நர்சிங் மாணவி வலியுறுத்தினார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கரூர் சரக டி.எஸ்.பி தேவராஜ் தலைமையிலான போலீசார், சசிகுமார் மீது உறுதியாக வழக்குப் பதிய சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக உறுதி அளித்தார். அதன் பிறகு மாணவி உட்பட அவரது உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.