திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் சுற்றுலா தளமாக விளங்கி வருவதால், தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியை ரசித்து விட்டு போவது வழக்கம். இப்படி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி அண்ணா நகர், மூஞ்சிக்கல், நாயுடுபுரம், லேக் ஏரியா, பில்லர்லேக் உள்பட சில பகுதிகளில் கட்டிடங்களையும், ஓட்டல்களையும் கட்டியிருக்கிறார்கள்.
இந்தநிலையில்தான் சில சமூக ஆர்வலர்கள் மதுரை ஐகோர்ட்டில் கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி பல கட்டிடங்களை எழுப்பி உள்ளனர். இந்த கட்டிடங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். அதனடிப்படையில் மதுரை ஐகோர்ட்டும் கொடைக்கானலில் பல பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருந்த 45 ஓட்டல்களுக்கும், கட்டிடங்களுக்கும் சீல் வைக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் கொடைக்கானல் நகராட்சி ஆணையர் முருகேசன், நகர அமைப்பு அலுவலர் முருகானந்தம், பரமக்குடி, பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளில் உள்ள நகரமைப்பு அலுவலர்கள், ஆய்வாளர்கள் கொண்ட குழுவினரை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நான்கு குழுக்களாக பிரிந்து கொடைக்கானல் நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருந்த ஓட்டல்கள், லாட்ஜ்களுக்கு சீல் வைத்து வருகிறார்கள்.
அதுபோல் நகராட்சி கமிஷ்னர் முருகேசன் தலைமையிலான அலுவலர்கள் வாரகவேளி, ரெஸ்டாரெண்ட், உட்டீஸ் ஓட்டல் உள்பட சில ஓட்டல்களுக்கு சீல் வைத்து வருகிறார்கள். இப்படி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்க செல்லும் நகராட்சி அதிகாரிகளுடன் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்களுக்கு முதலில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு அதன்பின் இந்த கட்டிட வளாகத்தை இழுத்து பூட்டி சீல் வைத்துவிட்டு வருகிறார்கள். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் இருபதுக்கும் மேற்பட்ட விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து மீதி உள்ள கட்டிடங்களுக்கும் சீல் வைக்கும் பணி நாளையும் தொடர இருக்கிறது. இதைக்கண்டு கொடைக்கானல் நகரில் உள்ள விதிமுறைகளை மீறிய கட்டிடங்கள் ஓட்டல், வீடுகள் கட்டி குடியிருப்பவர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.