தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சார்பில் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், "மத்திய அரசின் திட்டங்களான பென்ஷன், மாதம் 500 ரூபாய் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, கைம்பெண் உதவித் தொகை, வயது முதிர்ந்தோர் உதவித் தொகை மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணத்தை அவர்கள் வாங்கிய கடனுக்காகப் பிடிக்கக் கூடாது என்று மத்திய அரசு கூறிய பிறகும்.. 10 லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து விட்டு 10,000 ரூபாய் கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்களுக்காக அந்த தொகைகளைப் பிடிக்கும் வங்கி மேலாளர்களைக் கைது செய்யக் கோரி வங்கிக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்" என்றார்.
இதனைத் தொடர்ந்து வங்கிக்கு பூட்டு போட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் பிரச்சனை தொடர்பாக மனு ஒன்று எழுதி வங்கி மேலாளரிடம் கொடுங்கள் என்று வலியுறுத்தினர். இருப்பினும் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் வரை வங்கியில் காத்திருந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று வங்கியின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கியின் மண்டல அதிகாரி விவசாயிகளுக்கு இது குறித்து உரிய பதில் கூறுவதற்கு முன்வராததால் விவசாயிகள் மீண்டும் வங்கியின் வளாகத்திற்குள் நுழைந்து வங்கிக்கு பூட்டு போடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.