அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோக்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
புதுச்சேரியில் கடந்த வாரம் 8 பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று பேருந்து மீது மோதி எட்டு பேரும் விபத்தில் படுகாயமடைந்தனர். இதற்கு காரணம் ஆட்டோவில் பள்ளிக் குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்வதால் நிகழ்ந்த விபத்து என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆர்டிஓ அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் இருக்க வேண்டும் இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் எனப் புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று மாலை எந்த பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கியதோ அதே பள்ளி பகுதியில் பள்ளி முடிந்து குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சுமார் 25க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் அடைத்துக்கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு அபராதமும் விதித்தனர்.