வேலூர் மாநகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வருகிறது பிரபல தனியார் மருத்துவமனையான சிஎம்சி மருத்துவமனை. இங்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் மற்றும் புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனையில் இருந்து வாகனங்கள் வெளியேறும் முக்கிய வாயில் காகிதப் பட்டறை ஆற்காடு சாலையில் அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைக்கு முன்தினம் மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியேறிய பேருந்து மற்றும் மருத்துவரின் காருக்கு ஆற்காடு சாலையில் நிறுத்தி இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் வழிவிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை சிஎம்சி மருத்துவமனை காவலாளி ஆட்டோ ஓட்டுநர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆட்டோவை அப்புறப்படுத்தும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மருத்துவமனை காவலாளியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.