திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் இன்று (03.02.2024) தமிழக அரசு சார்பிலும், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னையில் திமுகவினர், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி மேற்கொண்டுள்ளனர். அதன்படி சேப்பாக்கம் அரசினர் விடுதியில் இருந்து பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரை அமைதிப்பேரணி மேற்கொண்டுள்ளனர்.
இந்த அமைதிப் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான், உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு இடையே அமைந்துள்ள பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பேரறிஞர் அண்ணாவிற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திடுமாறு, அரசியல் கட்சியினர், அரசியல் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.