![Ani Thirumanjana darshanam In Chidambaram Nataraja Temple](http://image.nakkheeran.in/cdn/farfuture/qo8oWNUm4-fPf7NjD9NKUjGm92ntA6VY1382i6jRcd8/1657112609/sites/default/files/inline-images/y48.jpg)
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழா இரண்டு வருடங்களுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக ஆனி திருமஞ்சன விழா கரோனா தொற்றின் காரணமாக நடைபெறவில்லை. தற்பொழுது கரோனா தொற்று குறைந்ததன் காரணமாக விமர்சையாக நடைபெற்றது. ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட 5 தனித்தனி தேர்களில் சாமி சிலைகள் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. பின்னர் இரவு தேர் நிலைக்கு வந்த உடன், சுவாமி சிலைகள் தேரில் இருந்து இறக்கப்பட்டு, கோவில் உள்ளே உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்திருந்தனர். செவ்வாய் இரவு லட்சார்சனை பூஜையும், இன்று காலை மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரிக்கு சிறப்பு ஆராதனைகள், திருஆபரண அலங்காரம் செய்யப்பட்டு சித்சபையில் ரகசிய பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மூலவரான நடராஜர், சிவகாமசுந்தரி நடனம் ஆடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இவ்விழாவில் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வண்ணம் போக்குவரத்து போலீசார் வழிதடங்களை மாற்றி அமைத்துள்ளனர். ஆனி திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு நகர் பகுதியைச் சுற்றியுள்ள அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.