இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சிவகங்கை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிட்டவர் தேவநாதன் யாதவ். இவர் சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதி தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 24 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக தேவநாதன், குணசீலன், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமைநாதன், தேவசேனாதிபதி மற்றும் சுதீர்சந்தர் ஆகிய 7 மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் சாலமன் மோகன்தாஸ் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த 13ஆம் தேதி (13.11.2024) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “இந்த வழக்கில் 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் 1173 பேர் முதலீடு செய்துள்ளனர். முதலீடுகளின் முதிர்வு காலம் நிறைவடைந்ததும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டித் தொகையுடன் 37 கோடி ரூபாய் வழங்கப்படவில்லை. எனவே இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் முதலீட்டாளர்கள் நலச்சங்கத் தலைவர் சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
அதில், “இந்த விவகாரத்தில் ரூ. 300 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதால் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.11.2024) நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், எம். ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், “இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறைக்குக் கிடைத்த தகவல் மூலம் வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக அதன் தலைவர் தேவநாதன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். இதனைப்பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் விரைவாக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.