நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, ராஜீவ்காந்தி சாலை (OMR), இந்திரா நகர் சந்திப்பில் 18.15 கோடி செலவில் 'யு' (U)வடிவ மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.11.2023) தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
இந்திரா நகர் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள 237 மீட்டர் நீளமுள்ள இப்பாலம், 12.5 மீட்டர் நீளமுள்ள 19 கண்களைக் கொண்டதாகும். ராஜீவ்காந்தி சாலையின் வலது புறத்தில் இந்த பாலத்தின் ஏறு சாய்தளம் 120 மீட்டர் நீளத்திற்கும், இடது புறத்தில் இறங்கு சாய்தளம் 120 மீட்டர் நீளத்திற்கும் அமைக்கப்பட்டுள்ளது. இந்திரா நகர் ‘யு’ வடிவ மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படுவதால், சோழிங்கநல்லூர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் இந்திரா நகர் மேம்பாலம் வழியாக ஏறி ‘யு’ திருப்பம் எடுத்து, இந்திரா நகர் வழியாக அடையாறு மற்றும் திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி விரைந்து செல்ல இயலும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் எஸ். பிரபாகர், செயல் இயக்குநர் எம். விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர்.