உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் (சில கண்ணிற்கு புலப்படாத சின்ன உயிரினங்கள் தவிர) உயிர்வாழ்தலுக்கு அடிப்படை தேவை ஆக்சிஜென். ஆக்சிஜென் கிடைப்பது நாம் சுவாசிக்கும் காற்றின் மூலம், இதற்கு அடுத்த அடிப்படை ஆதாரம் தண்ணீர். சுவாசிக்கும் காற்றும் அருந்தும் தண்ணீரும் நன்றாக இருந்தால்தான் நல்ல சுகாதாரமான ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும், இவை இரண்டும் மாசடைந்தால் முதலுக்கே மோசம்தான் என்கிறது பூவுலகின் நண்பர்கள் குழு.
அக்குழு மேலும் தெரிவித்துள்ளதாவது: உலக சுகாதாரத்தின் தரம் எப்படி உள்ளது என்று ஆய்வு செய்யும் "சுகாதார விளைவுகள் ஆய்வு நிறுவனம்" (health effects institute ) சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கொஞ்சம் "அதிர்ச்சி ரகம்தான்". உலகத்திலுள்ள 95 சதவீத மக்கள் மாசடைந்த காற்றைத்தான் சுவாசித்து கொண்டிருக்கிறார்கள் என்கிறது அந்த அறிக்கை. உலக சுகாதார நிறுவனம் (world health organisation) நிர்ணயித்துள்ள அளவுகளுக்கு மேலாக உள்ளது மாசின் அளவு என்பதை அந்த அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ளலாம். புகைபிடித்தல், ரத்தக்கொதிப்பு, உணவு பழக்கங்கள் இவற்றிற்கு பிறகு அதிகமாக மக்களை கொல்லக்கூடியதாக மாறியுள்ளது "காற்று மாசு". கடந்த ஆண்டு மட்டும் 70 லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளார்கள் என்றும் அதில் சரிபாதிக்கும் மேல் உயிரிழந்தவர்கள் இந்தியர்களும் சீனர்களும்தான் என்கிறது அறிக்கை. காற்றுமாசுபாட்டால் பக்கவாதம், மாரடைப்பு, நுரைஈரல் புற்று மற்றும் நாள்பட்ட நுரைஈரல் நோய்கள் அதிகமாகி இருப்பதாகவும் சொல்கிறது ஆய்வு.
மேலும் மாசடைந்த நாடுகளுக்கும் மாசடையாத நாடுகளுக்கும் இடையேயான அளவுகள் மிகவும் அதிகமாகிக்கொண்டிருப்பதாக சொல்கிறார் அந்த நிறுவனத்தின் பாப்.அனைத்து வளர்ந்த நாடுகளும் காற்றை மாசுபடுத்தாத தொழில்நுட்பங்களை அதிகமாக பயன்படுத்த தொடங்விட்டன, ஆனால் வளரும் நாடுகள் "பொருளாதார முன்னேற்றம்" என்ற சாக்கை வைத்துக்கொண்டு இன்னமும் அதிகமாக மாசுபடுத்தக்கூடிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். வளர்ந்த நாடுகளுக்கும் வளர்ந்துவரும் நாடுகளுக்கும் இடையில் இருந்த "காற்றுமாசு இடைவெளி" 1990களில் 6 மடங்காக இருந்து இன்றைக்கு பதினோரு மடங்காக உயர்ந்துள்ளது கவலையளிக்கக்கூடிய விஷயம்தான்.
பாப் மேலும், இன்னமும் அதிகதூரம் செல்லவேண்டி இருந்தாலும் நம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயங்கள் சில தென்படுகின்றன என்கிறார். காற்றுமாசை குறைப்பதில் சீனா அதிதீவிரமாக முன்னேறி வருவதையும், உலகத்தில் அனல் மின்நிலையங்களுக்கு மிகவும் அதிகமான தரக்கட்டுப்பாடுகளை சீனா தான் விதித்துள்ளது என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது. இந்தியா சில நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் அதில் போதாமை அதிகம் உள்ளது. தனிநபர் போக்குவரத்து இந்தியாவில் அதிகரித்து வருவதும் அதில் டீசலின் பயன்பாடு அதிகளவில் இருப்பதும் பிரச்சனையே.
உலகத்தில் நகரங்களின் பெருக்கமே காற்றுமாசிற்கு முக்கியமான காரணம் என்றும், அதிக மக்கள் நகரங்களை நோக்கி நகர்வதால் இந்த மாசு அதிகரிப்பதாகும் சொல்கிறது அந்த அறிக்கை.
இந்த பின்னணியில் சென்னையை "மகா நகரமாக்கும்" அரசின் முடிவு நிச்சயம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சுற்றுச்சூழல் பிரச்சனைகளில், "வந்தால் பார்த்துக்கொள்ளலாம்" என்றிருந்தால் "வந்தால் பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது" என்று நாம் எப்போது உணரப்போகிறோம்?
(கீழே உள்ள படத்தை பார்த்தால் இந்தியா எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்).