கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு தாமதமாக பணிக்கு வரும் மருத்துவர்களை கண்டித்து நோயாளிகள் மருத்துவரின் இருக்கைக்கு அருகில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்குடி அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் எனவும், நாய் கடிக்கு ஊசி இல்லாததை கண்டித்தும், மருத்துவர்கள் இரவு நேரங்களில் தங்கி பணியாற்ற வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் காட்டுமன்னார்குடி வட்ட மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் பிப் 8-ந்தேதி காலை 9.30 மணிவரை மருத்துவர்கள் பணிக்கு வராததால் நோயாளிகள் அவதியடைந்தனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட கட்சியினர், நோயாளிகளுடன் மருத்துவரின் இருக்கைக்கு அருகில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நோயளிகள் கூறுகையில் இங்கு பணியாற்றும் சில மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை வைத்துள்ளார்கள். அதனால் பணிக்கு சரியான நேரத்திற்கு பணிக்கு வருவது இல்லை. இரவு நேரத்தில் மருத்துவமனையில் தங்கி பணிசெய்துவம் இல்லை. இது தாலுக்காவின் தலைமை மருத்துவமனை இங்கு நாய்கடிக்கு மருந்து இல்லை என்கிறார்கள். ஆனால் எள்ளேரி என்ற கிராமத்தில் உள்ள ஆரம்பசுகாதரநிலையத்தில் நாய்கடிக்கு மருந்து எப்போதும் உள்ளது. அடிக்கடி மருந்து மாத்திரைகள் குறைவாக கொடுக்கீறார்கள் என்று கூறினார்கள்.
இதுகுறித்து மாவட்ட மருத்துவ இணைஇயக்குநர் கலா கூறுகையில், இனிமேல் அதுபோன்ற நிகழ்வு நடக்காது. மருத்துவர்களை நேரத்திற்கு பணிக்கு வர உத்திரவிட்டுள்ளேன். மருந்து மாத்திரைகள் இரு நாளைக்கு வரமாதிரி கொடுக்கப்படுகிறது என்றார்.