திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்டது சாத்தனூர் ஊராட்சி. சாத்தனூர் அணைக்கு, இந்த கிராமத்தை தாண்டிதான் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டும். இதனால் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த கிராமத்தை தாண்டி செல்கின்றனர். அப்படி செல்கிறவர்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் அளவுக்கு தூர் நாற்றம் வீசுகிறது.
அதோடு, ஊராட்சியில் கால்வாய்கள் சீரமைக்காமல் உள்ளது. கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாதததால் கொசுக்கள் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகின்றன. இனதால் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகின்றனர் என்கிற கோரிக்கைகளை முன்வைத்தும், சாத்தனூர் ஊராட்சியில் கிராம சபையில் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்திடாத ஊராட்சி நிர்வாகத்தையும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து, ஊராட்சி வளர்ச்சி இயக்கம் என்கிற அமைப்பின் சார்பில் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நவம்பர் 8ந்தேதி சாத்தனூர் அணை பேருந்து நிறுத்தம் முன்பு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும், இல்லையேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் கோஷம்மிட்டுள்ளனர்.