Skip to main content

சதிராடும் தேவதாசிகளின் கடைசி வாரிசு - அழியும் கலைக்கு உயிர் கொடுக்கும் 80 வயது முத்துக்கண்ணம்மாள்

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

 


தேவதாசி முறை சென்னை மாகாணத்தில் 1947ம் ஆண்டு ஒழிக்கப்பட்டபோது அந்த முறையின் கீழ் கோயில்களில் நடனமாடி வந்தவர்களில் ஒருவர் தற்போது எஞ்சியுள்ளார். ஒழிக்கப்பட்டுவிட்ட தேவதாசி மரபின் கடைசி வாரிசாகப் பார்க்கப்படும் 80 வயது முத்துக்கண்ணம்மாள் இன்றும் சதிர் நடனம் ஆடுகிறார்.

 

m

 

பொட்டு கட்டி கோயில்களில் கடவுள்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டவர்கள் தான் தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் எனப்பட்டனர். இவர்கள் கோயிலில் சதிர் நடனம் ஆடி கடவுள்களையும் பக்தர்களையும் மகிழ்வித்தனர். சுவாமி வீதி உலா என்றால் சதிர் நடனம் காண கிராமத்து இளைஞர்களும், முதியவர்களும் படையெடுத்து வந்துவிடுவார்களாம். 1947ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில் சதிர் நடனம், குறவஞ்சி என்றால் சுற்றியுள்ள அத்தனை கிராமங்களும் அங்கே தான். இதைப் பார்த்து பொள்ளாச்சி வரை இந்த கலைஞர்களை அழைத்துச் சென்று நடனமாட வைத்து மகிழ்ந்துள்ளனர்.

 

விராலிமலையைச் சேர்ந்த முத்துக்கண்ணம்மாள் உடலில் வயதுக்கான தளர்வு இருந்தாலும் அவரது கால்களும், கைகளும் சதிர் நடனத்தின் மீதான ஆர்வமும் பற்றும் அவரை இன்றும் ஆடத் தூண்டுகின்றன. எங்காவது அந்த தாளம் கேட்டால் பாடிக்கொண்டே ஆடுகிறார்.

 

ஏழு வயதில் விராலிமலை சுப்ரமணியசாமிக்கு பொட்டுக்கட்டிவிடப்பட்ட முத்துக்கண்ணம்மாள் ஆங்கிலேயர் காலத்தில், புதுக்கோட்டை சமஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களில் ஒருவராக இருந்தார்.

 

1947ஆம் ஆண்டில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்த பின்னர் கோயில் சேவகத்தைப் பலர் நிறுத்திவிட்டாலும், தான் மட்டும் நடனம் ஆடுவதை நிறுத்தவில்லை.


ஏழு வயதில் ஆரம்பித்த நடனம், எப்போதும் என் கால்கள் ஆடுவதையும், என் நாவு பாடுவதையும் நிறுத்தமுடியாது. சுப்ரமணியசாமியே என்னைப் போன்ற 32 தேவரடியார்களுக்கும் முதல் கணவன். இறைவனை துதித்துப் பாடவும், ஆடவும் நாங்கள் பிறந்துள்ளோம் என்று என் பாட்டி சொல்லுவார். தினமும் 400 படிக்கட்டுகள் ஏறிப்போய் காலையும், மாலையும் சுப்ரமணியசாமியைப் பாடி, வணங்கிவிட்டு வரவேண்டும்.


அதிகாலை ஆடல் பயிற்சி, வழிபாடு, பள்ளிப் படிப்பு, மாலை நடனப்பயிற்சி, வழிபாடு என ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு சேவகம் செய்வதே எங்கள் பிறப்பின் நோக்கமாக முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போனார்கள். தற்போது உடல் தளர்ச்சியால், தினமும் செய்ய முடியாவிட்டாலும், திருவிழா காலங்களில் சாமிக்கு பாடுவதும், ஆடுவதும் என் கடமை என்றே என் மனம் சொல்கிறது, அதையே செய்கிறேன்.

 

தை மற்றும் மாசி மாதங்களில், விராலூர் கிராமத்தில் சுப்ரமணியசாமி கோயில் தேர்த் திருவிழாவில், அப்பா பாடுவார், நான் நடனம் ஆடுவேன். ஊரில் உள்ள பெரியவர்கள் வந்து மரியாதை செய்து, பட்டுப்புடவை தருவார்கள். 

 

m

 

ஏழு தலைமுறையாக தேவரடியாராக இருந்த குடும்பத்தில் இனி யாரும் சதிர் நடனம் ஆடப்போவதில்லை என்பது முத்துக்கண்ணம்மாளுக்கு வருத்தம் தரும் விஷயமாகிவிட்டது.   தற்போது வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் சதிர் நடனம் ஆடி, தேவரடியார்களின் வரலாற்றை இளைஞர்களிடம் கூறிவருகிறார் இந்த மூத்த சதிர் நடனக்கலைஞர்.

 

சென்னையில் தக்சின் சித்ரா காலசார மையத்தின் 2018ஆம் ஆண்டின் 'தக்சின் சித்ரா விருது' நிகழ்வில் தனது வாழ்க்கை குறித்துப் பேசியதோடு அல்லாமல், சதிர் நடனத்தையும் முத்துக்கண்ணம்மாள் ஆடிக்காட்டினார்.

 

நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருந்த தொழில்முறை நடனம் பயிலும் பல பெண்களை தன்னுடன் கும்மியடி நடனம் ஆடவைத்து, பாம்பு நடனம் மற்றும் விராலிமலை குறவஞ்சி ஆகியவற்றில் சில நடன அசைவுகளை விளக்கமாக இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைத்தார்.

 

விராலிமலை கோயிலில் இருந்த 32 தேவரடியார்களுக்கும் குருவாக நடனம் சொல்லித்தந்தவர் என் அப்பா ராமச்சந்திரன். விராலிமலை குறவஞ்சியை உருவாக்கினார். ஆசைப்பட்டு கேட்ட எல்லோருக்கும் சொல்லிக்கொடுத்தார். அவரிடம் நடன அசைவுகளைக் கற்றுக்கொண்ட பரதக்கலைஞர்கள், அவருக்கான அங்கீகாரத்தை அளிக்காமல் போய்விட்டார்கள் என்ற வருத்தம் எனக்கு அதிகமாகவே உள்ளது, 80 வயதிலும், பாடிக்கொண்டே, பாடலுக்கேற்ற பாவத்துடன், அவர் நடனம் ஆடியபோது, நிகழ்ச்சியைப் பார்த்த பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

 

பரதநாட்டியம் பயிலும் மாணவிகளும், ஆசிரியர்கள் பலரும் முத்துக்கண்ணம்மாளுடன் பாடிக்கொண்டே ஆட முயற்சித்து களைப்புற்றனர். தமிழ்நாட்டில் இந்த கலையை கற்க ஆள் இல்லையே என்றிருந்த போது தற்போது பல பரநாட்டியம் கற்றும் நடன கலைஞர்கள் சதிர் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். கனடா உள்ளிட்ட வெளிநாட்டு கலைஞர்கள் இந்த கலையை கற்க வந்து தங்கி இருந்து கற்கிறார்கள். 


விராலிமலை முருகனை முதல் கணவனாக ஏற்றவர்கள் நாங்கள். நித்திய சுமங்கலி என்று எங்களை கூறுவார்கள். திருமணங்களில் நாங்கள் நலங்கு பாடல்கள் பாடி தாலி எடுத்துக்கொடுக்கும் வழக்கமும் இருந்தது. கோயில்களில் நடனம் ஆடுவதால், எங்களை மரியாதையுடன் நடத்துவார்கள். நான் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். பள்ளிக்கூடத்திற்கு அரசு அதிகாரிகள் வந்தால், என்னை தான் முதல் வரிசையில் நிறுத்தி, பாடவும், ஆடவும் அழைப்பார்கள். மற்ற பிள்ளைகளும் எங்களை கண்ணியமாக நடத்துவார்கள்,'' என்று கூறினார்.


நாங்கள்தான் கடைசி தலைமுறை தேவரடியார்கள். தினமும் கோயிலில் எங்களுக்கான வருகைப் பதிவேடு இருந்தது. அன்றாடம் கோயிலில் உணவு கொடுப்பார்கள். என் பாட்டி அம்மிணியம்மாளுக்கு 18 ஏக்கர் நிலம் கொடுத்திருந்தார்கள். அந்த நிலத்தின் விளைச்சலில் ஒரு பகுதியை கோயிலுக்கு தந்தது போக மீதமுள்ளதை எங்கள் பயன்பாட்டுக்கு சேமித்துக்கொள்வோம்.

 

m

 

பருவம் வந்ததும், சரியாக கணவரை தேர்ந்தேடுத்துக்கொள்ளும் உரிமை தேவரடியார்களுக்கு இருந்தது. எங்களுடன் வாழ்க்கை நடத்தும் ஆண்கள் எங்களின் வேலைகளை புரிந்தவர்களாகவும், கண்ணியமாக எங்களை நடத்துபவர்களாகவுமே இருந்தனர். 

 

கோவையில் 15 பரத நாட்டிய ஆசிரியர்களுக்கு சதிர் நடனத்தின் பிரத்யேக அசைவுகளை சொல்லிக்கொடுத்தேன். கடந்த மாதம் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் கலைக்காவிரி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தேன். சதிர் நடனம் என்னோடு அழிந்து போய்விடுமோ என்ற பயத்தால் யாரெல்லாம் ஆர்வமாக இருக்கிறார்களோ, அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்று விரும்புகிறேன். தேவரடியார்கள் என்ற ஒரு கலைஇனத்தின் கடைசி அடையாளமாக நான் இருப்பதாக நினைக்கிறேன். காலம் மாறிவிட்டது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டாலும், இந்த கலை வடிவத்தை நம் சமூகம் மறந்துவிட்டால், தேவரடியார் என்ற ஒரு இனத்தின் வரலாற்றையும் மக்கள் மறந்துவிடுவார்கள்.

 

தேவதாசி ஒழிப்புச்சட்டம் வந்த பின்னர், ஏதோ காரணங்களுக்காக எங்கள் குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 17 ஏக்கர் நிலம் கைவிட்டுப்போனது ஒரே ஒரு ஏக்கர் நிலத்தில் மட்டும் இன்றும் பயிர் செய்து, முன்னோர்கள் சொன்னபடி கோயிலுக்கு தருகிறோம். 

 

அரசாங்கம் தேவரடியார் முறையை ஒழித்துவிட்டது. ஆனால் பரம்பரை பரம்பரையாக கோயில் சேவகம் செய்த எங்களின் நலனில் அக்கறை காட்டாமல் போய்விட்டார்கள். கோயில் சடங்குகளில் இருந்த முக்கியத்துவமும் குறைந்துவிட்டதால், சமூக அந்தஸ்தும் இல்லாமல், வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டோம்.  ஆனாலும் தற்போதும் கூட பொள்ளாச்சியில் நடக்கும் திருவிழாவில் எனக்கு அழைப்பு உண்டு. அதே போல நாட்டுக்கோட்டையில் பல திருவிழாக்களில் எங்களில் சேவகம் தொடர வேண்டும் என்று அறிந்தவர்கள் வந்து அழைத்துச் சென்று மரியாதை செய்து அனுப்புகிறார்கள். 

 

அரசு அளித்துவரும் நாட்டுப்புறக் கலைஞர் உதவித் தொகையான மாதம் ரூ.1,500 மட்டுமே தனக்கு கிடைப்பதாக கூறும் முத்துக்கண்ணம்மாள்.. தமிழக அளவில், தேவரடியாராக இருந்தவர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. எனக்கு அளிக்கப்படும் மாத உதவித்தொகையை உயரத்திக்கொடுத்தால் என் மருத்துவச் செலவுக்கு உதவியாக இருக்கும்,'' என்றும் கூறினார் 80 வயதை கடந்த சதிர் நடன கலைஞர் முத்துக்கண்ணமாள்.    உரியவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்பதே நம் ஆசையும்.


        

சார்ந்த செய்திகள்