
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ரஜினி நலம் விசாரித்து சென்ற சிறிது நேரத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை சகஜமான நிலைக்கு திரும்பியது. இதன் பின்னர் நாம் காயமடைந்தவர்களை சந்தித்து ரஜினி என்ன கூறினார் என்று கேட்டபோது,
அவர் எங்களை பார்த்து கையெடுத்து வணங்கினார். நாங்களும் வணங்கினோம். எங்களை பார்த்ததும் ரஜினி கண்கலங்கி விட்டார். காயங்களை பார்த்து எப்படி அடிப்பட்டது என்று கேட்டார். நாங்கள் பதில் கூறுதற்குள் அதிகாரிகள் அவரை வேகமாக அழைத்துச்சென்று விட்டனர்.
நாங்கள் அவரிடம் ஸ்டெர்லைட்டை நிரந்திரமாக மூட வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னோம். அவ்வளவு தான் பேசினோம். மேற்கொண்டு பேச முடியவில்லை என்றார்கள் மனகுமுறலுடன். எங்கள் ஒவ்வொருவருக்கும் ஹார்லிக்கஸ், பழங்கள், பிஸ்கெட், பிரெட் என ரூ.1500 மதிப்புள்ள உணவு பொருட்களை தந்து சென்றார்.
ரஜினி சென்ற பின் வந்த அவரது மன்ற நிர்வாகிகள்.. தலைவர் சென்னை சென்ற பிறகு உங்களுக்கு நிவாரணத் தொகையை அறிவிப்பார் என கூறி சென்றனர் என்றார்கள்.