![50 meter standard drawn buffalo; Public beware again](http://image.nakkheeran.in/cdn/farfuture/_jUk1ibZvqB4hcQPwVSeO7Kl33SrxhH1FTbH4AEB050/1718623040/sites/default/files/inline-images/a72190.jpg)
சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்த சென்ற பெண்ணை எருமை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கெனவே சென்னையில் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தது. அது மட்டுமல்லாது முதியவர்கள் சிலர் மாடு தாக்கி உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள கிராமத்து தெரு என்ற தெருவில் நடந்து சென்ற பெண் ஒருவரை எதிர்புறத்தில் நடந்து வந்து கொண்டிருந்த எருமை மாடு எதிர்பாராத விதத்தில் முட்டியது. மேலும் கொம்பில் சிக்கிக்கொண்ட அப்பெண்ணை தாறுமாறாக சுழற்றியதோடு. அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு அந்தப் பெண்ணை இழுத்துச் சென்றது. இந்தக் காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. பெண்ணை மீட்க வந்தவர்களையும் அந்த எருமை மாடு முட்டியது. இதில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே சென்னையில் வளர்ப்பு நாயால் ஒரு சிறுமி கடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது எருமை மாடு முட்டி பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.