
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வீட்டின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து ஒரே வீட்டைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும்வழங்க சி.பி.எம் வலியுறுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் செட்டித்தெரு விட்டல்தாஸ் நகரைச் சேர்ந்தவர்கள் குமார், ராஜேஸ்வரி. இருவரும் கறம்பக்குடி பேரூராட்சியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். வாடகை வீட்டில் குடியிருந்து வரும் இவர்களுக்கு கிருத்திக்ரோஷன்(6), அரவிந்த்(5). என்ற 2 மகன்கள்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியின் மேல் ஏறி இருவரும் விளையாடியுள்ளனர். ஏதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டி உடைந்து இருவரும் உள்ளே விழுந்துள்ளனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை காணததால் பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். பின்னர், கழிவுநீர் தொட்டி அருகே சென்று பார்த்த பொழுது தொட்டி உடைந்து இருந்ததும், அதற்குள் இருவரும் மூழ்கி கிடைப்பதும் தெரியவந்தது.

இருவரையும் மீட்ட உறவினர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதனை செய்தபோது இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர், இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை சிறுவர்களின் உடல்கள் கறம்பக்குடி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சிறுவர்களின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து எஸ்.சங்கர் செய்தியாளர்களிடம் கூறும் போது.. அரசு புறம்போக்கு இடத்தில் தனியார் ஆக்கிரமித்து இந்த கழிவுநீர்த் தொட்டியை அமைத்துள்ளனர். அருகிலேயே குடிநீருக்கான ஆழ்துளைக் கிணறும், நீர்த்தேக்கத் தொட்டியும் உள்ளது. இத்தகைய சூழலில் தனியார் அந்த இடத்தில் கழிவுநீர்த் தொட்டியை அமைக்க கறம்பக்குடி பேரூராட்சி நிர்வாகம் எப்படி அனுமதித்தது? பேரூராட்சி அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடும், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை தொழிலாளர்களாக வேலை செய்யும் பெற்றோர் இருவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கட்சியின் மாவட்டக்குழு சார்பில் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.