Skip to main content

“அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது” - பிரதமர் மோடி உறுதி!

Published on 28/03/2025 | Edited on 28/03/2025

 

 PM Modi assures India is ready to provide all assistance

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் இன்று (28.03.2025) மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்தன. இந்திய நேரப்படி காலை 11:55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அனைவரும் வெளியேறி வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் ஏற்பட்ட இந்த பேரிடர் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பாக வெளியான முதற்கட்ட தகவலின் படி மியான்மரின் மாண்டலே நகரில் 20 பேரும், டாங்கூ நகரில் 5 பேரும் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழலில் தான் தாய்லாந்து தலைநகர் பாங்காங் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. புதியதாகக் கட்டப்பட்டு வந்த இந்த கட்டடத்தில் இருந்த 43 தொலிளார்களின் நிலை என்ன? என்பது பற்றிய விவரம் ஏதும் அரியப்படாததால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதோடு ஏராளமான வழிப்பாட்டுத் தலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

மீட்புப் பணி குறித்து விவாதிக்கத் தாய்லாந்து பிரதமர் சினா வர்த்ரா அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதே சமயம் பாங்காங்கில் அவசர நிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட அதிர்வு நாடு முழுவதும் உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் தடுப்புத்துறை அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. வியட்நாம், மலேசியா, வங்கதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 PM Modi assures India is ready to provide all assistance

இந்நிலையில் இது தொடர்பாகப் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நிலைமை குறித்து கவலை அடைந்துள்ளேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன். இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது. இது சம்பந்தமாக, எங்கள் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். மேலும், மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மியான்மர், தாய்லாந்து நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “தற்போது மியான்மரில் ஏற்பட்ட சேத அறிக்கையை நாங்கள் முதன்மையாகப் பகுப்பாய்வு செய்து வருகிறோம். மியான்மரில் உள்ள அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். மேலும் அந்நாடுகளுக்குத் தேவைப்படும் உதவி மற்றும் நிவாரணப் பொருட்களின் அடிப்படையில் சரியான தேவைகளையும் ஆராய்ந்து வருகிறோம். அண்டை நாடுகளில் இதுபோன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படும் போதெல்லாம்,  இந்தியா எப்போதும் முதலில் உதவுபவராக இருந்து வருகிறது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்