Skip to main content

“இருக்கக்கூடிய பெயரையும் கெடுப்பதற்குத் துணை போகாதீர்கள்” - முதல்வர் வேண்டுகோள்!

Published on 28/03/2025 | Edited on 28/03/2025

 

CM mk stalin says Dont help tarnish your reputationc

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இத்தகைய சூழலில் தான் துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (28.03.2025) நேரமில்லா நேரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினை குறித்து முன்னறிவிப்பு ஏதுமின்றி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர்.

இதன் காரணமாக, அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித் தாக கூறி அக்கட்ட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக விளக்கமளித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இந்த அவைக்கும், அவையின் மூலம் நாட்டு மக்களுக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது. பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏதுமின்றி, மக்கள் அமைதியாக, இணக்கமாக வாழ்கிறார்கள். இதனால்தான் தொழில் முதலீடு, புதிய தொழிற்சாலைகள், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் என தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நேர்மறையான சூழலைத் தாங்கிக்கொள்ள முடியாத சில மாநில விரோத சக்திகள், தமிழ் மக்கள் விரோத சக்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கக்கூடிய கொலை, கொள்ளை போன்ற ஒரு சில நிகழ்வுகளை ஊதிப் பெரிதாக்கி, மக்களை பீதியில் வைக்க இரவு பகலாக மக்களின் பாதுகாப்பிற்காக உழைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய தமிழ்நாட்டு காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கு பிரதான எதிர்கட்சியும் துணை போகிற வகையில் தூபம் போடுகிறது. சில ஊடகங்களும், பத்திரிக்கைகளும் சேர்ந்து துணை போவது இன்னும் வேதனை அளிக்கிறது. தமிழ்நாடு அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி விடமுடியுமா என துடிக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் எத்தகைய கலவரங்கள் நடைபெற்றன என்பது அனைவருக்கும் தெரியும். அதுபோன்ற எந்தக் கலவரமும் இந்த ஆட்சியில் இல்லை. குற்றங்களின் எண்ணிக்கை இந்த ஆட்சியில் குறைந்து வருகிறது.

புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குகள் போடப்படுகின்றன; குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் மீது வழக்கு போடப்படுகிறது: தண்டிக்கப்படுகிறார்கள்; கைது செய்யப்படுகிறார்கள். இதுதான் உண்மை. இப்படி பல்வேறு உறுதியான நடவடிக்கைகள் எடுத்து மக்களை காவல் துறையும், தமிழ்நாடு அரசும் பாதுகாத்து வருகிறது. ஆகவே, சில நேரங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை வைத்து தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கே சீர்கெட்டு விட்டதாக மக்களை திசை திருப்புவதற்காகவே வீண் புரளிகளை கிளப்பாமல், எதிர்கட்சித் தலைவராக இருந்தாலும், அவர் கூட்டணி வைக்கக் துடித்துக் கொண்டிருக்கக்கூடிய கட்சியாக இருந்தாலும் ஆக்கபூர்வமான அரசியல் செய்ய முன்வாருங்கள்.

CM mk stalin says Dont help tarnish your reputationc

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியிலும் சரி, தற்போது எதிர்க்கட்சித் தலைவரின் முந்தைய ஆட்சியிலும் சரி, இப்போது எங்களது ஆட்சியிலும் நடைபெறும் குற்றச் சம்பவங்களின் தரவுகளை வைத்துத்தான் காவல் துறையின் செயல்பாட்டை அளவிட முடியும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த தவறான பிம்பத்தை உருவாக்க வேண்டாமென இந்தத் தருணத்தில் ஊடகங்களையும் நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அரசின்மீது ஆக்கபூர்வமான குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அரசியல் செய்வதற்காக தமிழ்நாடு காவல்துறையின் பெயரையும், அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்று இருக்கக்கூடிய பெயரையும் கெடுப்பதற்குத் துணை போகாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்