பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. ம.தி.மு.க.வின் மாநில பொருளாளராக உள்ள கணேசமூர்த்தி தான் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். எதிரணியான அ.தி.மு.க.வில் வெங்கு என்கிற மணிமாறன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ம.தி.மு.க. வேட்பாளர் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார். ம.தி.மு.க.விற்கு ஏற்கனவே இருந்த பம்பரம் சின்னம் இல்லை என்ற நிலை வந்த போதே, ஈரோடு திமுகவினர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் வேட்பாளர் கணேசமூர்த்தியை சந்தித்து நீங்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள். தனியாக சுயேச்சை சின்னம் என்றால் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வது மிகுந்த சிரமம். மேலும் அ.தி.மு.க. மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை இப்போது நமது கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. இந்த நிலையில் நம்மை எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க. இரட்டை இலையில் நிற்கிறது.
மக்களின் எதிர்ப்பு ஓட்டுக்கள் நமது கூட்டணிக்கு அப்படியே வரவேண்டும் என்றால் சின்னம் முக்கியம். இரட்டை இலைக்கு எதிராக எந்த சின்னம் இருக்கிறது என்று மக்கள் தேடிப் பார்க்கும் போது ஏற்கனவே அறிமுகமான சின்னமாக இருக்க வேண்டும். அதன்படி உங்களின் பம்பரம் சின்னம் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதற்கு அடுத்தபடியாக உதயசூரியன் சின்னம் என்றால் நாம் வெற்றியை சுலபமாகப் பெறலாம். தனி சின்னம் என்று சுயேச்சை சின்னத்தில் நின்றால் வெற்றி என்பது மிகுந்த சிரமம். இதை மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியிடம் விரிவாக விளக்கியதோடு, திமுக தலைமையிடமும் இந்த கருத்தை கொண்டு கொண்டுசென்றனர்.
திமுக தலைமையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அழைத்து ஈரோடு தொகுதியில் உள்ள நிலவரத்தை சொல்லி உதயசூரியன் சின்னத்தில் நிற்க முடியுமா என்பதை யோசியுங்கள். வெற்றிதான் முக்கியம் என கூறியுள்ளார்கள். ஆனால் மதிமுகவில் உள்ள சில நிர்வாகிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு விரும்பவில்லை. இதனால் தனி சின்னம் தான் என்ற முடிவை எடுத்து வைகோவும் அறிவித்துவிட்டார்.
இந்த அறிவிப்பு ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் உள்ள திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தேர்தல் மிகக் குறுகிய நாட்களே உள்ளதால் மதிமுக வாங்கும் சுயேச்சை சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியாது என்பதோடு பாராளுமன்ற தொகுதியில் மதிமுகவுக்கு பல பூத்களில் தொண்டர்களே இல்லை என்பதால் மதிமுகவுக்கு வழங்கப்படுகிற சின்னத்தை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தான் மக்களிடம் கொண்டு சென்று அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.நிர்வாகிகள் தொண்டர்களிடையே சோர்வும் குமுறலும் ஏற்பட்டுள்ளது.