புதிய கல்வி கொள்கை சமூக நீதிக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்கள் சேவை மையம் சார்பில் தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம் கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்வியாளர் ரமேஷ் பிரபா உள்ளிட்டோர் கலந்துகொண்டு புதிய கல்விக் கொள்கையில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பது குறித்து விளக்கமளித்தனர்.
மேலும், மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் புதிய கல்விக் கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள அம்சங்கள் குறித்தும் இக்கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன்,
புதிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார். அனைத்து மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் புதிய கல்விக் கொள்கை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். வேலூர் இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன், இந்த வெற்றியின் மூலம் எந்த வித எழுச்சியும் திமுக பெறவில்லை என்று விமர்சித்தார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.