
கொடைக்கானலின் 175வது பிறந்தநாள் தினத்தை கொண்டாட முடியாமல் பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 1845ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது தங்களது படைகளை பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது குதிரை மூலமும், டோலி கட்டியும் உயரதிகாரிகள் கொடைக்கானல் மலைக்கு சென்று வந்தனர்.
அப்பகுதியில் உள்ள சீதோஷணம் தங்களுக்கு ஒத்துப்போகவே ஆங்கிலேயர்கள் நிரந்தரமாகத் தங்கினர். அதன் அடிப்படையில்தான் மே 26-ஆம் தேதி கொடைக்கானல் கண்டுபிடிக்கப்பட்ட நாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன் பின்னர் தன்னார்வலர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மே 26ஆம் தேதியன்று கொடைக்கானல் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கடந்த இரண்டு வருடங்களாக அரசு சார்பில் விழா எடுக்கப்பட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த ஊரடங்கு முடிந்த பின்னர் கோடை இளவரசியின் 175 வது பிறந்தநாளை கொண்டாட கொடைக்கானல் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.