தமிழகத்தில் ஆர்வமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களை ஏதாவது ஒரு வகையில் சாதிக்கத் தூண்டி வருகின்றனர். இதில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாநிலத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளது.
அந்த வரிசையில் தான் ஆவணத்தான்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களையும் சாதனை மாணவர்களாக மாற்றி வருகின்றனர் பள்ளி நிர்வாகத்தினர். நெகிழி இல்லாத பசுமைப் பள்ளியாக, ஐ.எஸ்.ஒ தரச்சான்று பெற்ற பள்ளியாக திகழ்கிறது. படிப்பு மட்டுமின்றி ஒழுக்கத்திலும், தனித்திறன்களிலும் சிறந்து விளங்கும் இந்தப் பள்ளிக்குத் தனியார் பள்ளிகளைப் போலத் தனி வாகன வசதியும் உள்ளது.
தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கல்வியாண்டை வரவேற்கும் விதமாக "திருக்குறள் தொடுப்போம்" என்ற சாதனை நிகழ்வை மாணவர்கள் நிகழ்த்தியுள்ளனர். புதிய கல்வியாண்டைத் தமிழ் மூலம் வரவேற்கும் விதமாக இந்த திருக்குறள் தொடுப்போம் நிகழ்வை நடத்தியிருப்பதாகக் கூறும் ஆசிரியர்களும், மாணவர்களும், "அனைத்து வசதிகளுடன் உள்ள எங்கள் பள்ளியில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிகழ்வுகள் நடத்துவோம். அதேபோல தான் இந்த கல்வியாண்டை வரவேற்கத் திருக்குறள் தொடுப்போம் நிகழ்வைச் சாதனை நிகழ்வாக நடத்தி இருக்கிறோம். அதாவது உலகப் பொதுமறையான திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களிலும் உள்ள 1330 திருக்குறளையும் ஒரு அதிகாரத்தை ஒரு மாணவர் என்ற அடிப்படையில் 133 அதிகாரத்தையும் 4- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை உள்ள 133 மாணவ, மாணவிகள் 3 நிமிடங்களில் எழுதிச் சாதித்து இருக்கிறார்கள். இதே போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்துவோம். மேலும் 1,330 திருக்குறளையும் எழுதி ஒப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு திட்டத்தையும் அறிவித்திருக்கிறோம்" என்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதிப்பார்கள் என்பதற்கு இவர்கள் ஒரு எடுத்துக்காட்டு தான்.