
அத்திகடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
விழா மேடைக்கு மாட்டு வண்டியில் வந்திறங்கிய எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசும் போது, “நான் யாருக்கும் அடிமையாக மாட்டேன்; பணத்தாலும் பொருளாலும் என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது. மக்கள் நலனை பற்றி திமுக அரசுக்கு அக்கறை இல்லை; திறமையற்ற அரசு ஆட்சியில் உள்ளது. அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் 85 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு விட்டன. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நான்கு ஆண்டுக் காலம் இத்திட்டத்தை திமுக கிடப்பில் போட்டது.
இந்த அரசு எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவர முயற்சி செய்யாமல் திறந்து மட்டுமே வைத்து வருகிறது. விவசாயிகளின் கனவை அதிமுக நிறைவேற்றி உள்ளது. மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசு நிதியை ஒதுக்கித் திட்டத்தை தொடங்கி வைத்தேன். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக திட்டங்களை நிறுத்தி வைக்கப்பட்டன” என்றார்.