Skip to main content

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!

Published on 10/02/2025 | Edited on 10/02/2025

 

Minister Senthil Balaji responds to Palaniswami  allegations

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே நேற்று(9.2.2025) நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

விழா மேடைக்கு மாட்டு வண்டியில் வந்திறங்கிய எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசும் போது, “நான் யாருக்கும் அடிமையாக மாட்டேன்; பணத்தாலும் பொருளாலும் என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது. மக்கள் நலனை பற்றி திமுக அரசுக்கு அக்கறை இல்லை; திறமையற்ற அரசு ஆட்சியில் உள்ளது. அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின்  85 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு விட்டன. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நான்கு ஆண்டுக் காலம் இத்திட்டத்தை திமுக கிடப்பில் போட்டது.

இந்த அரசு எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவர முயற்சி செய்யாமல் திறந்து மட்டுமே வைத்து வருகிறது.  விவசாயிகளின் கனவை அதிமுக நிறைவேற்றி உள்ளது. மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசு நிதியை ஒதுக்கித் திட்டத்தை தொடங்கி வைத்தேன். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக திட்டங்களை நிறுத்தி வைக்கப்பட்டன” என்றார். 

இந்த நிலையில் எடப்பாடியின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சமூக வலைதள பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 

* 1957- பவானி ஆற்றின் உபரி நீரை திருப்பி விடவேண்டும் என கோவை மாவட்ட விவசாயிகள் மனு (CM - காமராஜர்) 

* 1972-இத்திட்டத்திற்கு அத்த்திக்கடவு அவிநாசி திட்டம் என பெயரிடப்பட்டு திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. (CM - கலைஞர்)

* 2009-Technical expert committee அமைக்கப்பட்டு திட்ட வரையறை செய்யப்பட்டது. (CM -கலைஞர்) 

* 2019-திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1,634 கோடி செலவில் 34 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் போதிய நிதி ஒதுக்காமலும், நிலம் கையகப் படுத்தாமலும் கிடப்பில் போடப்பட்டது. (CM - எடப்பாடி பழனிச்சாமி) 

* 2021-2024 இத்திட்டத்திற்கு முழுமையாக தேவையான 1,960 கோடி நிதியையும் ஒதுக்கி, அத்திட்டத்தில் உள்ள பிரச்சினைகளை களைந்து, திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.(CM - மு.க.ஸ்டாலின்)

* 2025-நீர் மக்களுக்கு கிடைக்கப் பெற்றது. (CM மு.க.ஸ்டாலின்)” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்