மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிவரும் தற்காலிக பெண் ஊழியர்கள் ஒவ்வொருவராக மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாமணி கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தா. இவர் கடந்த 9 ஆண்டுகளாக கர்ணாவூர் ஊராட்சியின் ஊக்குவிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 2017-2019ம் ஆண்டிற்கான பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கர்ணாவூர் ஊராட்சியில் 274 வீடுகள் மற்றும் 890 கழிப்பறைகள் கட்டாமலேயே கட்டியதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது என புகார் எழுந்ததை தொடர்ந்து அலுவலக மேலாளராக பணியாற்றி வரும் ராஜா, உதவி பொறியாளர் சண்முக சுந்தரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி , பணிகள மேற்பார்வையாளராக வேலை பார்த்த பிரபாகரன் ஆகிய நான்கு பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிகழ்வை நமது நக்கீரன் இணையத்தில் செய்தியாக்கியிருந்தோம்.
இந்தநிலையில்தான் அடுத்தடுத்து இரண்டு பெண் ஊழியர்கள் யூனியன் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெயுடன் வந்து தீக்குளிக்க முயன்றனர். இது குறித்து சுகந்தா கூறுகையில், "தற்போது பணியாற்றிவரும் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் தொடர்ந்து ஆபாசமான வார்த்தைகளால் பேசுவதும், திட்டி தீர்ப்பதோடும் கட்டாத 844 கழிவறைகளையும் கட்டியதாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். ஆனால், நான் கட்டிய கழிப்பறை 337 மட்டும்தான், எப்படி ஒத்துக்கொள்ள முடியும், அவர் செய்த ஊழலுக்கு நான் எப்படி உடந்தையாக முடியும்.
2015 ல் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய கார்த்திகேயன் ரூ.80 லட்சம் கட்டுமான பணிக்கான முன் தொகையை ஈடுகட்ட சொல்கிறார். அதோட எனக்கும் வேறு ஒருவருக்கும் முறையற்றத் தொடர்பு உள்ளதாக எனது கணவரிடம் இல்லாதது பொல்லாததைக் கூறி மிரட்டுகிறார். ஒரு கழிவறை கட்டுவதற்கு ரூ.12,000. ஆனால், அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு கழிவறைக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சமாக எடுத்துக்கொண்டு மீதமுள்ள ரூ.9 ஆயிரம்தான் தருவாங்க. அதுலதான் கழிவறை கட்டனும்." என்கிறார்.
அதுதான் தற்போது குற்ற சாட்டாகவும் இருக்கிறது. கணினி பிரிவு மையத்தில் தற்காலிக பணியாளரான ஆனந்தி நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சி செய்ததை தொடர்ந்து மேலும் தற்காலிக பணியாளர் சுகந்தா தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ள சம்பவம் மன்னார்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.