தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புனேவில் இன்று தனது கட்சியின் பாத யாத்திரையை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாக இளைஞர்களுக்குத் திருமணம் செய்வதற்குக் கூட பெண்கள் கிடைப்பதில்லை” என கவலை தெரிவித்துள்ளார்.
மேடையில் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆனால் பாஜகவோ மிஷன் 45 என்ற கோஷத்தை எழுப்புகிறது. நட்டாவின் சொந்த மாநிலமான இமாச்சலில் பாஜக தோற்றதை அவருக்கு நினைவுபடுத்துகிறேன். நாட்டில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாக இளைஞர்களுக்குத் திருமணம் செய்வதற்குக் கூட பெண்கள் கிடைப்பதில்லை. இன்றைய இளைஞர்கள் படிக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்குரிய வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
முதுகலை படிப்பு படித்த இளைஞர்கள் கூட வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். ஆனால் பாஜக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதில் மதவாதம் மற்றும் பிரிவினைவாதத்தைப் பரப்புகிறது. இரு சமூகத்தினரிடையே பிரச்சனையை உருவாக்குகிறது. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இதுபோன்ற செயல்களில் பாஜக ஈடுபடுகிறது” எனக் கூறினார்.
2 நாட்களுக்கு முன் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மகாராஷ்டிரா சென்று 2024 தேர்தலை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா மிஷன் 45 என்ற கோஷத்தை முன்வைத்து பிரச்சாரத்தை துவங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.