சண்டையில கிழியாத சட்டையா? சேர்மன் பதவியேற்புன்னா உடையாத கண்ணாடியா? என கேஷுவலாக நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் கும்பகோணத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினர்.
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலின் அறிமுக முதல் கூட்டம் ஒன்றிய கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் காயத்ரி தலைமை வகித்தார். கமிஷனர் பூங்குழலி முன்னிலை வகித்தார். அறிமுக நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை திமுக எம்.பி. ராமலிங்கம், கும்பகோணம் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். திமுக கவுன்சிலர்கள் 18 பேரும், அதிமுக கூட்டனியைச் சேர்ந்த 9 பேரும் கலந்து கொண்டனர்.
கவுன்சில் அறிமுக கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு தீர்வை பெற்றுத்தந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக கமிஷனர் பூங்குழலி அறிவித்தார். அப்போது அதிமுக கவுன்சிலர் சசிகலா, தீர்மானங்களை படிக்காமல், அதுகுறித்து விவாதிக்காமல் எப்படி தன்னிச்சையாக நிறைவேற்றுகிறீர்கள் என்றார்.
அதோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 28ஆம் தேதி ரகசியமாக நடந்த யாகம் எதற்காக? யாரிடம் அனுமதி வாங்கப்பட்டது? அதற்கு அனுமதி அளித்தது யார்? எந்த நோக்கத்தில் இது நடத்தப்பட்டது? என்று கமிஷனர் பூங்குழலியை கேள்விகளால் துளைத்தெடுத்தார்.
ஆனால் அதற்கான உரிய பதிலை கூறமுடியாமல் முழித்தார் ஆனையர் பூங்குழலி. அதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைக்கேட்டு வெளியில் இருந்த திமுக மற்றும் அதிமுகவினர், நிர்வாகிகள் கூட்டம் நடந்த அரங்கிற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு கூடியது. அவர்களை அலுவலக ஊழியர்கள் தடுத்து நிறுத்த முயன்றும் பயனில்லை. இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் கமிஷனர் அறையின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன.
காவல்துறையினர் இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றும் பயனில்லை. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொண்டும் கோஷங்களை எழுப்பிக்கொண்டும் இருந்தனர், பிரச்சனையை கட்டுக்குள் கொண்டுவர போலிஸார் குவிக்கப்பட்டு அதிமுகவினரை வெளியேற்றினர். அதன்பிறகு திமுகவினரும் கலைந்து சென்றனர். இதற்கிடையே அலுவலக கண்ணாடி உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசில் புகார் அளித்திருக்கிறார் கமிசனர் பூங்குழலி.
அதிமுக திமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.