Skip to main content

“நீங்க இத்தாலி கூட்டணி; நாங்க தமிழ்நாடு கூட்டணி...” - ராஜேந்திர பாலாஜி அதிரடி

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

Rajendra Balaji criticized the India alliance

 

விருதுநகர் மேற்கு மாவட்டம் -  சிவகாசி சட்டமன்றத் தொகுதி -  சிவகாசி  கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற 52 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, “அதிமுகவுக்கு வயது 52. திமுகவுக்கு 76 வயது. 100 வயதைக் கடந்துவிட்டது காங்கிரஸ். திமுக, காங்கிரஸ் எல்லாம் ரிட்டயர்மென்ட் வாங்கிவிட்டனர். தற்போது சும்மா ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்தி அதிமுக கொடி பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக கொடி பறக்காத கிராமம் இல்லை. அதிமுக தொண்டன் இல்லாத ஊர் இல்லை. 2 கோடி தொண்டர்கள் நிரம்பிய கட்சி அதிமுக. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகின்றது. காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி. அதற்கு பேர் இந்தியா கூட்டணியாம். கிடையவே கிடையாது, காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ளது இத்தாலி கூட்டணி.  

 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையப் போகின்ற கூட்டணி தமிழ்நாடு கூட்டணி. ஒரு ஜாதி வளையத்திற்குள் எடப்பாடி பழனிசாமியை அடைக்கப் பார்த்தார்கள். அதையெல்லாம் தாண்டி, நான் எல்லா ஜாதிக்கும் பொதுவானவன் என்று சொல்லி, எல்லா பகுதிகளுக்கும் சென்றார். நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. திமுக ஆட்சியில் மக்கள் சந்தோசமாக இல்லை. எங்கு பார்த்தாலும் பிரச்சனை. சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பி 10 லட்சம் பேர் வாழ்கின்றனர். நாடு முழுவதும் மறைமுகமாக 1 கோடி பேர் பட்டாசு சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பட்டாசு விபத்துகள் நடந்தபோது நான், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் கூறி, எல்லா பட்டாசு ஆலைகளுக்கும் செல்லும் சாலைகள் புதிதாக போடப்பட்டன. அதனால், பட்டாசு பயிற்சி மையம் சிவகாசியில் அமைந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பட்டாசு தொழில் என்னவாகுமோ என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலைப்பட்டனர். 

 

அதிமுக ஆட்சியில் துணை நின்றோம். பட்டாசு தொழிலை பாதுகாத்தவர் எடப்பாடி பழனிசாமி. துணை நின்றவன் நான். திமுக ஆட்சிக்கு வந்த உடனே அனைத்து வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலை அதிபர்கள் பாதிக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எல்லோரும் பாதிக்கப்படுகின்றனர். இன்றைக்கு பட்டாசு தொழில் கேள்விக்குறியாக மாறிவிட்டது. கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைப் போல்  பட்டாசு ஆலை அதிபர்கள் ஓடி ஒளிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலைகளில் எதற்கெடுத்தாலும் தொடர்ச்சியாக ரெய்டு பண்ணுகிறார்கள். உழைக்கும் பட்டாசு தொழிலாளர்கள் வாழும் பூமி இது. ரெங்கபாளையம் பட்டாசு கடை வெடி விபத்தால், பட்டாசு உற்பத்தி நடைபெறவில்லை. பட்டாசை வேடிக்கையாக வெடித்து பார்த்ததால் விபத்து ஏற்பட்டது. அதைத் தடுக்கின்ற பணியை அங்குள்ள நிர்வாகிகள் செய்திருக்க வேண்டும். வெடி விபத்தில் ஏராளமான பெண்கள் பலியாகினர். இந்த வெடி விபத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த பட்டாசு தொழிலை அழிக்க நினைத்தால் நாங்கள் விடவே மாட்டோம்.    

 

எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு, எனது தலைமையில் பட்டாசு தொழிலை பாதுகாக்க, பட்டாசு தொழில் பாதுகாப்பு பேரவை என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, பட்டாசு தொழிலுக்கு எங்கெல்லாம் பிரச்சனை வருகின்றதோ, அங்கெல்லாம் சென்று நாங்கள் துணை நிற்போம். கீழ் மட்ட அதிகாரிகள் கடைகளை பூட்டச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். பூட்ஸ் காலோடு கடைக்குள் நுழைந்து மிரட்டுகின்றனர். பட்டாசு ஆலை அதிபர்களை கிரிமினல்களைப் போன்று அதிகாரிகள் பார்க்கின்றனர். கீழ் மட்டத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகளும் அத்துமீறி வேலை பார்க்கின்றனர். இந்த ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கில் பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கையால் பட்டாசு ஆலை தொழிலை நடத்த முடியாத நிலையில் ஆலை அதிபர்கள் உள்ளனர்.

 

குன்னூர் சாலை விபத்தில் பஸ் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர். அந்த சாலையில் பஸ் போக்குவரத்திற்கு தடை விதித்தார்களா? மீண்டும் அந்த சாலையில் பஸ் ஓடவில்லையா?  விபத்து  நடந்ததற்காக அந்த தொழிலை முடக்க நினைப்பது தவறு. விபத்து அனைத்து தொழில்களிலும் நடக்கிறது. பட்டாசு விபத்து நடந்தால் அதை தடுக்கின்ற வேலையைப் பாருங்கள். அதை விடுத்து 20 நாட்கள் பட்டாசு ஆலையை பூட்டினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதை திமுக அரசுதான் பார்க்க வேண்டும். பட்டாசு தொழிலுக்கு தொடர்ந்து இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டிருந்தால், அதிமுக சார்பாக பட்டாசு பாதுகாப்பு பேரவையை உருவாக்கி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று இந்த அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன்.       

 

ஏழை எளிய மக்களை, பட்டாசு தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும்  என்றால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் அதிமுகவை வெற்றிபெறச் செய்யுங்கள். எடப்பாடி பழனிசாமி  கை காட்டுபவர் பிரதமராக  வரவேண்டும். அல்லது அவரே பிரதமராக வரவேண்டும். நான் இதைச்  சொன்னவுடனே, சிலர் அதை நக்கல் செய்து கருத்து தெரிவித்துள்ளனர். ஒரே எம்பியாக இருந்த ஐ.கே. குஜ்ரால், சந்திரசேகர் பிரதமராக வரவில்லையா? கர்நாடக தேவகவுடா பிரதமராக வரவில்லையா. 10 எம்பிக்களை வைத்துக்கொண்டு பிரதமராக வரும்போது, 2 கோடி உறுப்பினர்களை வைத்திருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமராக வர முடியாது? சாதிப்பதென்பது எடப்பாடி பழனிசாமிக்கு சவால். பொதுமக்களுக்கு உழைப்பது அவரது பிறவிக்குணம். அவரது பின்னால் 2 கோடி தொண்டர்கள் அணிவகுத்து நிற்போம். இந்தியாவில் 3வது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் அதிமுகவை அமர வைத்தது ஜெயலலிதா. அப்படிப்பட்ட  இயக்கம் அதிமுக வீழ்ந்து விடுமா? அதிமுக புது எழுச்சியோடு மீண்டும் எழுந்து வரும். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெல்வோம்.” எனப் பேசினார்.  

 

 

சார்ந்த செய்திகள்