
‘அதிமுக ஒண்ணும் தேய்ந்துவிடவில்லை; வாக்கு வங்கியில் வலுவாகத்தான் இருக்கிறோம். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கோ, முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கோ, அதிமுகவினரை சோர்வடையச் செய்துவிடாது’ என்பதை உணர்த்தும் விதமாக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தொண்டர்களைப் பெருமளவில் திரட்டிவிடுகின்றனர் அதிமுகவினர்.
தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு, மதுரையிலிருந்து விருதுநகர் மாவட்டம் வழியாக வந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு, விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரங்குடியில், விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக, விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பும் அத்தகையதே! இந்த வரவேற்பில் முன்னாள் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக வேட்பாளர்களை 100 சதவீதம் வெற்றி பெற வைக்கும் வகையில், 9 மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்து, ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி ஆலோசனை வழங்கவிருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் குஷியோடு சொல்கின்றனர்.