அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்தை வைத்து மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கவும், அந்த பதவியைக் கைப்பற்றவும் எடப்பாடி செய்த சூழ்ச்சிகளால் ஒற்றைத் தலைமை களேபரம் அதிமுகவில் வெடித்தபடி இருக்கிறது. ஒற்றைத்தலைமை கூடாது; இரட்டை தலைமையே தொடர்வேண்டும்; பொதுச்செயலாளர் பதவியில் யார் அமர்ந்தாலும் அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார் ஓபிஎஸ்.
இந்த நிலையில், “இந்த விவகாரத்தில் சட்டரீதியாக எடப்பாடியால் சாதிக்க முடியுமா? இறுதியில் ஜெயிக்கப்போவது இபிஎஸ்சா? ஓபிஎஸ்சா?” என்கிற விவாதங்கள் அதிமுக நிர்வாகிகளிடம் பரபரப்பாகவே எதிரொலித்தபடி இருக்கிறது.
இந்தச்சூழலில், இது குறித்து, அதிமுகவின் தென்சென்னை மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் என்.வைத்தியநாதன் நம்மிடம் பேசியபோது, “கடந்த வருடம் டிசம்பர் மாதம் 1-ந் தேதி அதிமுக தலைமையகத்தில் மா.செ.க்களின் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுவை அதிமுக தலைவர்கள் கூட்டினர். அந்த செயற்குழுவில் தான், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ் ஆகிய இருவருக்கும் வானளாவிய அதிகாரத்தை வழங்கும் வகையில் கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றினர்.
அதாவது சட்டவிதிகள் 20(2), 40, 45 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வந்தனர். இதற்கான தீர்மானத்தை கே.பி.முனுசாமி முன்மொழிந்தார். இந்த திருத்தப்பட்ட விதிகளின் படி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை ஓட்டு மூலம் இணைந்தே தேர்ந்தெடுப்பர். கட்சியின் சட்டவிதிகளை நீக்கவும், ஏற்றவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என்றிருந்ததை (விதி எண்: 43), விதிகளை நீக்கவும், ஏற்றவும், திருத்தவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என்று மாற்றியமைத்தனர்.
அதேசமயம், ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர்களை அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றவோ திருத்தவோ பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும் கட்சி விதிகளைத் திருத்தினர்.
கட்சியின் சட்டவிதிகளைத் தளர்த்துவதற்கும், விதி விலக்கு அளிப்பதற்கும் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உண்டு என்று இருந்த சட்ட விதி 45-யை, கட்சியின் அடிப்படை உணர்வாக உள்ள ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர்களைக் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை மட்டும் தளர்த்தவோ, விதிவிலக்காக்கவோ இவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று திருத்தம் செய்தனர்.
இப்படி மூன்று வகையான திருத்தங்கள் அன்றைய செயற்குழுவில் முன்மொழியப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், இவற்றுக்குப் பொதுக்குழுவின் அங்கீகாரம் வேண்டும். இன்றைய வரையில், அதற்கான அங்கீகாரமோ ஒப்புதலோ பெறப்படவில்லை. அந்த ஒப்புதலைப் பெறுவதற்காகத் தான் 23-ந்தேதி பொதுக்குழு கூட்டப்படுகிறது.
இந்த இடத்தில் தான் எடப்பாடி விளையாடுகிறார். அதாவது, செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திருத்தங்களுக்குப் பொதுக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டிருந்ததால்தான், இரட்டைத் தலைமைக்கு அதிகாரம் வரும். ஆனால், ஒப்புதல் பெறப்படாததால், சட்டவிதிகளைத் திருத்துவதற்கு முன்பு, பொதுக்குழுவே அதிகாரம் பெற்றதாகவும், எந்த விதிகளையும் தளர்த்தவும் விதிவிலக்களிக்கவும் இரட்டைத் தலைமைக்கு அதிகாரம் உண்டு என்பதாகவும் இருந்த நடைமுறைகளுக்கு உயிர் வந்து விடுகிறது.
இதைப் பயன்படுத்தியும், பொதுக்குழுவில் தனக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தியும் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி அதனைக் கைப்பற்ற எடப்பாடி துடிக்கிறார். எடப்பாடியின் இந்த விளையாட்டை ஓபிஎஸ் அறிந்ததால் தான், எடப்பாடியின் கனவை நிறைவேறாமல் தடுக்கப் பார்க்கிறார். இதனையும் மீறி, பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கினாலும் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அது செல்லுபடியாகும். அதனால் எடப்பாடியின் கனவு நிறைவேறுவதில் நிறையச் சட்டவிதி சிக்கல்கள் இருக்கவே செய்கிறது” என்கிறார் வைத்தியநாதன் மிக அழுத்தமாக.