சில மாதங்களாக அமைதியாக இருக்கும் சசிகலா, மீண்டும் அரசியல் பணிகளைத் துவக்கவிருக்கிறார். அதிமுகவின் 50வது ஆண்டு துவக்க விழாவை (அக்டோபர் 17) முன்னிட்டு வெளியே வருகிறார் சசிகலா.
சிறையில் இருந்து விடுதலையான பிறகு சென்னை வந்த சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் செல்வதாக இருந்தது. ஆனால், இதுவரை அவர் செல்லவில்லை.
இந்நிலையில், அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு வருகிற 16ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு முதன்முறையாக செல்கிறார் சசிகலா. ஜெ.வின் நினைவிடத்தில் உருக்கமாகப் பிரார்த்தனை செய்கிறார். மறுநாள் 17ஆம் தேதி, தி.நகரில் இருக்கும் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்குச் செல்லும் சசிகலா, ராமாவரத்திலுள்ள எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீட்டிற்குச் செல்கிறார். அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து வணங்கிவிட்டு, எம்.ஜி.ஆரின் காது கேளாத பள்ளிக்குழந்தைளுக்குப் பல நலத்திட்ட உதவிகளை செய்கிறார் சசிகலா! அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. தி.நகர் மற்றும் ராமாவரம் நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமமுகவின் முன்னாள் தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் என். வைத்தியநாதனிடம் ஒப்படைத்திருக்கிறார் சசிகலா! சசிகலாவின் வருகையை அமர்க்களப்படுத்த தடபுடல் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
அதிமுக பிறந்தநாளில், ஜெயலலிதா நினைவிடத்துக்கும் எம்.ஜி.ஆர். இல்லத்துக்கும் செல்லும் சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிரடி ஸ்டேட்மெண்ட் கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.