
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்றி 15 நாட்களுக்குள் தலைமைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் 'தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்கள் என பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத ரீதியிலான அமைப்புகளின் அனைத்து கொடிக் கம்பங்களையும் 12 வாரத்தில் அப்புறப்படுத்த வேண்டும்' என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை கடைபிடிக்கும் வகையில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நிர்வாகிகளுக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தல்களை கொடுத்துள்ளார். அதில் தமிழகம் முழுவதும் மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர் கிளை என பொது இடங்களில் திமுக கொடிக் கம்பங்கள் பொதுஇடத்தில் இருந்தால் மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் திமுக நிர்வாகிகள் அகற்றி அதற்கான தகவலை தலைமைக்கு தெரிவிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.