தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவரான தாமோதரனின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நீலாங்கரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்துகொண்ட கே.எஸ்.அழகிரி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியது குறித்து அக்கட்சியினர் சிலர் கூறுகையில், ''சுயமரியாதையை இழந்து நாம் அரசியல் செய்யக் கூடாது. நாம் அரசியலில் இருந்தாலும் சுயமரியாதையோடுதான் இருக்க வேண்டும். யாரையும் அட்டைப்போல சார்ந்து இருக்கக் கூடாது. சுயமாக சிந்திக்கக் வேண்டும். சுயமரியாதையோடு கட்சி நடத்த வேண்டும்.
தங்கபாலுவுக்கு டெல்லியை எப்படி கையாள வேண்டும் என்று தெரியும். ஆனால் எனக்கு தெரியாது. நான் மாநிலத் தலைவராகி ஒரு வருஷமானாலும் அதிகம் டெல்லி சென்றதில்லை. கட்சி வளர்ச்சிக்காக என்ன அரசியல் செய்ய வேண்டுமோ அதுதான் எனக்கு தெரியும். அதைத்தான் நான் செய்வேன். டெல்லிக்கு அடிக்கடி போகணும் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. டெல்லியை நாம கையாளணும். அதுதான் எனக்கு பிடித்த அரசியல்.
முன்பெல்லாம் நாம், அதாவது மேலே இருக்கிற நாங்களும், கீழே இருக்கிற நீங்களும் காமராஜர் ஆட்சி அமைப்போம், காமராஜர் ஆட்சி அமைப்போம் என சொல்லிக்கொண்டிருப்போம். ஆனால் இப்போதெல்லாம் நாம் அந்த குரலை எழுப்புவதில்லை. காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பதை விட்டுவிட்டு வேறு எதையோ பேசிக்கொண்டிருக்கிறோம். அதனால் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது. சுயமரியாதையோடு அரசியல் செய்ய வேண்டும்'' என தனது மனதில் இருக்கக்கூடிய ஆதங்கம், கோபம், வருத்தம் என எல்லாவற்றையும் இந்த விழாவில் பேசியிருப்பதாக தெரிவித்தனர்.
இவரது பேச்சு குறித்து அக்கட்சியினர் சிலரிடம் நாம் மேலும் பேசியபோது, ''கே.எஸ்.அழகிரியுடைய பேச்சு கட்சியினருக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. யாருக்கும் அடிபணிந்து போகக்கூடாது என்கிற ரீதியில் மாநிலத் தலைவர் பேசியிருப்பது ஓரளவு கட்சியினருக்கு திருப்தி ஏற்படுத்தியிருக்கிறது. இவர் இப்படி பேசுவதற்கான காரணம், அண்மையில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கே.எஸ்.அழகிரியும், கே.ஆர்.ராமசாமியும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதுதொடர்பாக திமுக தலைமை டெல்லிக்கு தனது அதிருப்தியை தெரியப்படுத்தியிருந்தது. இதையடுத்து டெல்லி, திமுக தலைமையை சமாதானப்படுத்துங்க என்று கே.எஸ்.அழகிரியிடம் கூறியதால், திமுக தலைமை விருப்பத்திற்கு ஏற்ப கடிதம் ஒன்றை வெளியிட்டார். பின்னர் அறிவாலயலம் சென்று சந்தித்தார். அதற்கு பிறகு திமுக மீது கே.எஸ்.அழகிரி வருத்தத்தோடு இருந்தார். அந்த வருத்தத்தில்தான் இப்படி பேசியதாக'' கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டதாக தெரிவித்தனர்.
ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவரான தங்கபாலுவுடன் அதிகம் நெருக்கமாக உள்ளார். இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கிப்போன்று உள்ளனர். அதனால்தான் தங்கபாலு ஆதரவாளரான தாமோதரன் பிறந்த நாளில் கலந்து கொண்ட கே.எஸ்.அழகிரி வெளிப்படையாக இப்படி பேசியதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.