
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன் மகன் சந்தோஷ்குமார்(17). இவர் குறுக்குச்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய அக்கா அன்னலட்சுமிக்கு திருமணமாகி கணவருடன் கழுகுமலையில் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை ராகவன் உடல்நலம் சரியில்லாமல் உயிரிழந்த நிலையில் தாய் ஜெயலட்சுமி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இதனிடையே சந்தோஷ்குமாருக்கு அதிகளவில் பெண் தன்மை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே சந்தோஷ் குமார் பள்ளியிலும், வீட்டின் அருகாமையிலும் யாருடனும் சரிவர பேசாமல் நண்பர்களுடன் சேராமல் ஒதுங்கியே இருந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்த, 15ஆம் தேதி ஜெயலட்சுமி தனது உறவினர்களுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் சந்தோஷ்குமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தோஷ்குமார் பெண் வேடம் அணிந்து எடுத்த போட்டோவை தனது செல்போனில் ஸ்டேட்டஸ் ஆக பதிவிட்டிருந்தாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த அவரது அக்கா அன்னலட்சுமி சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார். மேலும் உடனடியாக அந்த ஸ்டேட்டஸை நீக்குமாறு கூறியுள்ளார். அதன்பிறகு சந்தோஷ்குமார் ஸ்டேட்டஸை நீக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் அன்னலட்சுமி மீண்டும் தனது தம்பி சந்தோஷ்குமாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் செல்போன் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த அன்னலட்சுமி வீட்டின் அருகே உள்ள உறவினருக்கு விவரத்தை எடுத்து கூறி வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
உடனடியாக அவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தால் ஜன்னல் வழியாக பார்த்தபோது சிறுவன் சந்தோஷ்குமார் சேலை ஜாக்கெட் அணிந்தபடி வேறு ஒரு சேலையில் தூக்கில் தொங்கியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசா சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் பெண் வேடம் அணிந்த ஸ்டேட்டஸை அக்கா நீக்கச் சொன்னதால் தம்பி சந்தோஷ்குமார் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
செய்தியாளர்: மூர்த்தி