கர்நாடக மாநில பாஜக தலைவராக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அம்மாநில பா.ஜ.க. எம்.பி. இதற்குத் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
பா.ஜ.க.வின் தலைவர்கள், ‘தி.மு.க., காங்கிரஸ் என முக்கிய கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலின் பிடியில் சிக்கியிருக்கிறது எனத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரங்களுக்காக வேறு மாநிலங்களுக்கு செல்லுமிடத்திலும் வாரிசு அரசியல் குறித்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், கர்நாடகாவில் முன்னாள் முதல்வரான பா.ஜ.க.வைச் சேர்ந்த எடியூரப்பாவின் மகன் அந்த மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது பலராலும் வாரிசு அரசியல் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா பா.ஜ.க.விலேயே எடியூரப்பா மகன் விஜயேந்திரா நியமனத்திற்கு எதிரான மனநிலை நிலவி வருகிறது.
கர்நாடகா பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ரமேஷ் ஜகஜினகி, எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமனத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம், விஜயபுரா பகுதியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரமேஷ் ஜகஜினகி எம்.பி., “நீங்கள் தலித்தாக இருந்தால் பா.ஜ.க.வில் வளர்வதற்கான வாய்ப்பே இருக்காது.
பணக்கார தலைவர்கள் அல்லது கவுடாக்களாக இருந்தால், மக்கள் அவர்களை ஆதரிக்கிறார்கள். ஆனால் ஒரு தலித்தாக இருந்தால், யாரும் ஆதரிக்க மாட்டார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் விஜயேந்திரா, எடியூரப்பாவின் மகன் எனும் காரணத்தினாலே பா.ஜ.க. தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, கர்நாடக மாநில பாஜக தலைவராக அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான விஜயேந்திராவை நியமித்து உத்தரவிட்டிருந்தார். விஜயேந்திரா வரும் 15ம் தேதி கட்சித் தலைவராகப் பதவி ஏற்கவிருக்கிறார்.
முன்னதாக கர்நாடகா பா.ஜ.க. நிர்வாகிகளில் முக்கியமான நபரான சி.டி. ரவி, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள இருப்பதால் விஜயேந்திரா பதவி ஏற்பில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எடியூரப்பா மகன் பதவியேற்பு; சி.டி. ரவியின் முடிவால் பா.ஜ.க.வில் பரபரப்பு