
இன்று (12.10.2021) காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகையும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபுவை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைதுசெய்ய வேண்டும் என்று புகார் அளித்தனர்.
அந்தப் புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது, “நாம் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய சாட்டை வலைக்காட்சியின் துரைமுருகன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில், பொதுமேடையில், பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசியிருப்பதை சமூக ஊடகங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.
‘பெரியார், அண்ணாவின் பிள்ளைகளுக்குப் பேச தெரியும், எழுதத் தெரியும். ஆனால் நாங்கள் பிரபாகரன் பிள்ளைகள். பிரபாகரன் பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று காங்கிரஸ்காரனுக்கு தெரியும், ராகுல் காந்திக்கு தெரியும், சோனியா காந்திக்கு தெரியும், உங்களுக்கும் தெரியும் இல்ல. ஸ்ரீபெரும்புதூர் ஞாபகம் இருக்குதுல்ல. அவ்வளவுதாண்டா, அவ்வளவுதான்’ என்று துரைமுருகன் பேசுகிறார்.
இதேபோன்ற கருத்தை இதற்கு முன் சீமானும் பேசியிருக்கிறார். தமிழகத்தில் மீண்டும் மனிதவெடிகுண்டு படுகொலைகள் நடக்கும் என்றும், அதற்கு நாம் தமிழர் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என்ற பொருள்பட வெளிப்படையாகவே மிரட்டுகின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.
நாம் தமிழரின் இந்தப் பேச்சு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் - UAPA வரக்கூடிய கொடும் குற்றமாகும். திரு. துரைமுருகன் மட்டுமல்லாமல், திரு. சீமானும் தொடர்ந்து தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதத்தை, வன்முறையை முன்னிறுத்தி, ஆதரித்து, நியாயப்படுத்தி பேசிவருகிறார்.

வன்முறையை, பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசிவரும் சீமானும், அவர் கட்சியினரும் தமிழகத்தில் சுதந்திரமாக செயல்பட முடிவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நிச்சயம் ஆபத்தை ஏற்படுத்தும். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய வயதில் உள்ள இளைஞர்களை வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் பாதையில் அழைத்துச் செல்வது ஆபத்தானது. இதனால் தமிழகத்தின் அமைதியும், அப்பாவி இளைஞர்களின் எதிர்காலமும் தடம் மாறி, அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும் ஆபத்து ஏற்பட உறுதியான வாய்ப்புகள் உள்ளன.
இம்மாதியான பயங்கரமான குற்றச்செயல்களிலிருந்து தங்களை அரசியல் செல்வாக்கு காப்பாற்றும் என்கிற தைரியத்தில்தான், நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து இப்படி அத்துமீறி பேசி வருகின்றனர். இதற்கு தமிழ் மண்ணில் நாம் ஒருபோதும் இடம் தந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டின் அமைதியான எதிர்காலத்தில் நாம் ஒருதுளிகூட சமரசம் செய்துகொள்ளக்கூடாது.
அமைதிப்பூங்காவான தமிழகத்தையும், தமிழக இளைஞர்களையும் காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக திரு. சீமானை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் (UAPA) கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.