அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை நேற்று மாலை வெளியிட்டது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஆளுநரின் முடிவு நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சேலத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''துரைமுருகன் கிட்டத்தட்ட 65 ஆண்டுகாலம் திமுகவில் இருக்கிறார். பல போராட்டங்களில் கலந்து கொண்டவர். மூத்த கட்சி நிர்வாகி, மூத்த கட்சி தலைவர். இன்று இருப்பதிலேயே பல ஆண்டு காலம் அதிகமாக அமைச்சரவையில் இடம் பெற்றவர், அதிகநாள் அமைச்சராக இருந்தவர் துரைமுருகன் தான். அவர் திமுகவின் பொதுச்செயலாளரும் கூட. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இத்தனை மந்திரிகள் போய் பார்க்கவில்லை. சபரீசன் பார்க்கவில்லை. திமுகவிற்கு உழைத்தவர், பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்ற அப்படிப்பட்டவரை ஒரு சிலர் தான் பார்த்தார்களே தவிர எல்லா அமைச்சர்களும் சென்று பார்க்கவில்லை.
இன்றைய தினம் செந்தில் பாலாஜி ஐந்து கட்சிக்கு போய் வந்திருக்கிறார். ஒரே ஐந்து ஆண்டில் அதிமுகவிலிருந்து ஜெயிக்கிறார். பிறகு மூன்று வருடம் கழித்து திமுகவில் நின்று ஜெயிக்கிறார். பல கட்சிக்கு போய் வந்த ஒருவர் அதிகமாக துட்டு கொடுத்ததால் இன்றைக்கு ஸ்டாலின் ஓடோடி போய் பார்க்கிறார். ஏன் கட்சிக்காக உழைத்தவர்களை பற்றி கவலை இல்லை. கட்சிக்காக பாடுபட்டவர் மருத்துவமனையில் இருக்கிறார் அவரை பார்க்கவில்லை இத்தனை மந்திரிகளும். ஆனால் இன்று அனைத்து மந்திரிகளும் அங்கு போய் டேரா அடித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம், ஊழல் செய்து அதிகமான நிதியை கொடுத்தவர் செந்தில் பாலாஜி'' என்றார்.