மேற்கு வங்கத்தில் பாஜக எம்.பி.யின் மனைவியான சுஜாதா மண்டல்கான் டிசம்பர் 21-ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சியளித்தார்.
மேற்கு வங்கத்துக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி கட்சிகள், தேர்தல் பணிகளில் ஆயத்தம் காட்டிவருகின்றன. 2019 பாராளுமன்றத் தேர்தலில் 18 இடங்களைப் பிடித்து, மம்தாவுக்கு அதிர்ச்சியளித்த பா.ஜ.க., சட்டமன்றத் தேர்தலிலும் கணிசமான இடங்களை வெல்லும் நோக்கில் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டிவருகிறது.
மேற்கு வங்கத்துக்கு பா.ஜ.க. உள்துறை அமைச்சரும் வியூக வகுப்பாளருமான அமித்ஷாவின் மிட்னாப்பூர் வருகையின்போது, திரிணமுல் காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர் சுவேந்து, திரிணமுல் காங்கிரஸைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களுடனும் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் 30 பேருடனும் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.
இதையொட்டி பேசிய அமித்ஷா, தேர்தல் வரும்போது கட்சியில் யாருமில்லாமல் மம்தா தனித்து நிற்பார் எனக் குறிப்பிட்டார். இந்நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி. சமுத்திரா கானின் மனைவியான சுஜாதா மண்டல்கானை திரிணமுல்லுக்கு இழுத்து, பதிலடி தந்துள்ளார் மம்தா. இதையடுத்து சமுத்திராகான் தனது மனைவியை விவாகரத்துச் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.