தேனி என்.ஆர்.டி. நகர் பகுதியில் அமைந்துள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தில், தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசும்போது, “தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். கேரள மாநிலத்தில் ரூ.2,000 கோடிக்கு சொத்து வைத்துள்ளதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் என்மீதும், கேரள பத்திரிகை மீதும், எந்த ஒரு வழக்கும் தொடரவில்லை. இதிலிருந்தே, ஒ.பி.எஸ். ஊழல் செய்து கேரளாவில் சொத்து சேர்த்தது உறுதியாகிறது.
இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து வருமானவரித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துணை முதல்வரின் ஊழலை எடுத்துரைத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பிரச்சாரம் மேற்கொள்ளும். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க. ஊழல் குறித்த பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநரிடம் வழங்கியுள்ளார். இரண்டாம் கட்டப் பட்டியல் தயாராகிவருகிறது. அதில், ஓ.பி.எஸ். குறித்த ஊழல் இடம் பெறும் அந்த ஊழல் பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட உள்ளது.
அரசு சார்பாக மினி கிளினிக் பல பகுதிகளில் திறக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள் இல்லாத நிலையில் ஊழல் குற்றங்களை மறைப்பதற்காகவே, இந்த மினி கிளினிக் திறக்கப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படுகிறது எனக் கூறுவதற்கு மாற்றாக 2,500 கோடி வழங்கியுள்ளோம் எனக் கூறியுள்ளார்.
அவர் ரூ.2,500 கோடி வழங்கினால்கூட, இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அரசுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு மொரீஷியஸ் தீவிற்குத் தனி விமானத்தில் சென்றுள்ளார். யாரிடம் அனுமதி பெற்று சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. ஊழல் பணத்தைப் பதுக்குவதற்காகவே மொரிஷியஸ் சென்றுள்ளார் என நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இது குறித்து ஓ.பி.எஸ். தரப்பு எந்த ஒரு விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை” என்றார்.
திராவிட இயக்கங்களைக் குறிவைத்து சீமான் பேசுகிறார் எனக் கேட்டதற்கு, “திராவிட இயக்கங்களைப் பழித்துப் பேசக்கூடாது. திமுக தலைவர் கலைஞர் ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்துரிமை, விதவை உதவித் தொகை, மகளிர் திட்டம், எனத் தமிழக மக்களுக்காகப் பல சட்ட, திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். சீமான் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு இடையே பனிப்போர் நடக்கவில்லை நேரடியாகவே போர் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.