

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்று வட்ட பகுதிகளான காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாகப் பருவம் தவறி திடீரென கனமழை பெய்தது. இதில் காட்டுமன்னார்கோவில் வட்டத்திற்குட்பட்ட மா. உடையூர், மாதர்சூடாமணி, அழிஞ்சமங்கலம், வடமூர், தெம்மூர், தொண்டமாநத்தம், ஆழங்காத்தான், எடையார். சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட பொன்னம்பட்டு, கிள்ளை, மீதிகுடி, கோவிலாம்பூண்டி, கீழப்பரம்பை. அதேபோல் புவனகிரி வட்டத்திற்குட்பட்ட மணிகொல்லை, புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை, பெரியகுமட்டி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, தர்பூசணி, எள் மணிலா உள்ளிட்ட பயிர்கள் நன்கு வளர்ந்து வந்த நிலையில் உள்ளன.
இத்தகைய சூழலில் தான் தற்போது பெய்த கனமழையால் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தண்ணீர் தேங்கிப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீர் எளிதில் வெளியேற்ற முடியாததால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்தனர். இதுகுறித்து மணிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் கூறுகையில், “நெல் பயிர்கள் அறுவடையின்போது உளுந்து விதைப்போம் நெல்லில் ஏற்படும் நட்டத்தை உளுந்து பயிர் தான் ஈடு செய்யும். இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் வெள்ளம் காரணமாக நெல்லும் பாதிக்கப்பட்டது. தற்போது பனி மற்றும் வெயிலைக் கொண்டு வளரும் உளுந்து நல்ல முறையில் வளர்ந்திருந்தது.
இதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் பருவம் தவறி திடீரென பெய்த 2 நாள் மழையில் உளுந்து தர்பூசனி, மணிலா, எள் செடிகளில் தண்ணீர் தேங்கி முற்றிலும் அழிந்துவிட்டது. எனவே விவசாயிகள் அனைத்து விதத்திலும் பாதிக்கப்படுகிறோம். வேளாண் துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வயல்களில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.