சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் எல்.ஐ.சி. மற்றும் பொதுத்துறை வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்தம் செய்ததாக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் மக்கின் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், மாநில செயலாளர் சித்தார்த்தன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என இரண்டு பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து அதானிக்கு முறைகேடாக பணம் அளித்து இருக்கின்றனர். மோடி அரசாங்கம் தன்னுடைய நண்பரை வளர்ப்பதற்காக; ஒரு தனிநபரை வளர்ப்பதற்காக இந்த அராஜக செயலை செய்து இருக்கிறார்கள். அம்பானிக்கும் அதானிக்கும் கொடுக்கின்ற கடன் அளவுக்கதிகமாக ஆகியிருக்கிறது. ரூ. 9 லட்சம் கோடி பங்குகள் பொதுமக்களுக்கு கொடுப்பதை அதானியிடம் கொடுத்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. ஈரோடு தேர்தலில் பாஜக பரிதாப நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மகத்தான வெற்றியை பெறுவார்” எனப் பேசினார்.