542 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து கடும் குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது கட்சி ஏஜெண்டுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கட்சியின் தலைமையில் இருந்து அறிவுறுத்துவது வழக்கமான நடைமுறைதான்.
ஆனால் இந்த முறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை, ராமநாதபுரம், தேனி, கரூர் ஆகிய நான்கு தொகுதிகளை குறிப்பிட்டு அந்த தொகுதிகளில் திமுக ஏஜெண்டுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
வாரணாசில் நடந்த பாஜக கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் கலந்து கொண்ட பின்னர், இரண்டு நாட்களில் ஓர் இரவில் திடீரென 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி மக்களவை தொகுதியில் வந்து இறங்கின. அந்த இயந்திரங்கள் கோவையில் இருந்து வந்தன.
தேர்தல் அதிகாரி அதிமுக கரை வேட்டி கட்டாத அதிமுககாரர் போல் செயல்படுகிறார் என திமுக கூட்டணியில் போட்டியிடும் கரூர் மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றம் சாட்டினார்.
ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் நவாஸ்கனி சாயல்குடியில் உள்ள வாக்கு சாவடியை பார்வையிட்டார். பின்னர், பேட்டியளித்த அவர், சிக்கல் பகுதிகளில் உள்ள வாக்கு மையங்களில் எந்த சின்னத்தை அழுத்தினாலும் தாமரை சின்னத்திற்கே வாக்கு பதிவதாக தெரிவித்தார்.
திமுக நேரடியாக போட்டியிடும் தொகுதிகளைவிட திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை ஆளும் கட்சி குறிவைக்கிறதா என்ற சந்தேகத்தோடு, கோவை, ராமநாதபுரம், தேனி, கரூர் ஆகிய நான்கு தொகுதிகளை குறிப்பிட்டு அந்த தொகுதிகளில் திமுக ஏஜெண்டுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, கோவையில் இருந்தும், திருவள்ளுரில் இருந்தும் தேனிக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனடியாக நீக்குவதோடு, மக்களுடைய வாக்குகளைத் திருத்த நினைக்கும் அஇஅதிமுக வேட்பாளரின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி நியாயமான தேர்தலை தேனியில் நடத்தித் முடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.
இந்தநிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மாற்று கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும், அப்படி நடந்தால் அதனை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். திமுகவினர் தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் கைதேர்ந்தவர்கள். எனவே தில்லுமுல்லு நடத்தப்படுகிறதா என்பதை விழிப்போடு கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
குறுக்கு வழியில் வெற்றி பெற முயலவும், தோல்வி முகம் வந்தால், தேர்தல் முடிவுகளை நிறுத்தவும், பெருமளவில் ரவுடிகளை, ஆளும் கட்சியினர் ஏற்பாடு செய்து வைத்துள்ளனர் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அமமுக தேர்தல் பொறுப்பாளர் வெற்றிவேல் மனு அளித்துள்ளார்.
கட்சி முகவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரு சேர எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர்களின் எச்சரிக்கை பதட்டத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் வைத்துள்ள நிலையில், மக்களின் இறுதி தீர்ப்பை எந்த குளறுபடியும் இல்லாமல் உறுதிப்படுத்துமா தேர்தல் ஆணையம்.