Skip to main content

“பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை...” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Published on 13/03/2025 | Edited on 13/03/2025

 

Finance Minister Nirmala Sitharaman says choice spreading separatist sentiment amid

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (14.03.2025) தமிழக சட்டப்பேரவையில் தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில், 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தாக்கல் செய்யவுள்ளார். இத்தகைய சூழலில் தான் தமிழக அரசின் மாநில திட்டக்குழு சார்பில்  2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (13.03.2025)  வெளியிட்டார். அதே சமயம் பொருளாதார ஆய்வு அறிக்கையைத் தமிழக அரசு வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். அதோடு ரூபாய் (₹) என்ற அடையாளக் குறியீட்டிற்குப் பதிலாக தமிழ் எழுத்தான ‘ரூ’ என்பதை குறிக்கும் வகையில் இலச்சினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

இந்நிலையில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னமான '₹' ஐ நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது. திமுகவிற்கு உண்மையிலேயே '₹' உடன் பிரச்சனை இருந்தால், 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக  இருந்தபோது, ​​இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?. '₹' - இந்தச் சின்னத்தை முன்னாள் திமுக எம்.எல்.ஏ. - என். தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றுவதன் மூலம், திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.

மேலும், ரூபாய் என்ற வார்த்தை 'வெள்ளியால் செய்யப்பட்ட' அல்லது 'வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்' என்று பொருள்படும் 'ருப்யா' என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சொல் பல நூற்றாண்டுகளாக தமிழ் வர்த்தகம் மற்றும் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது, இன்றும் கூட, 'ரூபாய்' என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நாணயப் பெயராகவே உள்ளது. இந்தோனேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக 'ரூபாய்' அல்லது அதன் சமமான பெயர்களை தங்கள் நாணயப் பெயராகப் பயன்படுத்துகின்றன. 'ரூபாய்' என்ற சொல், சமஸ்கிருதத்தில் தோன்றியதால், தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பகிரப்பட்ட கலாச்சார, பொருளாதார மரபாகும் என்பது தெளிவாகிறது.

ரூபாய் சின்னம் '₹' என்பது சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் அடையாளமாக செயல்படுகிறது. யு.பி.ஐ. (UPI) ஐப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா?. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள். மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும், மேலும் இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது. இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாகவும் இது உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்