
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து அண்மையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியிருந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. அக்கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. தொடர்ந்து திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த 09/03/2025 அன்று திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் திமுக தலா ஒரு அமைச்சர், ஒரு எம்பி அடங்கிய குழு நேரில் சென்று தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னென்ன என்பதை நேரில் விளக்கி வரும் 22ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்து கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பிக்களுக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டனர். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர் கொண்டு குழு நேற்று (12-03-25) ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்பு குறித்து அதுதொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். அதனை தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலு, வில்சன் எம்.பி ஆகியோர் கொண்ட குழு, ஆந்திரப் பிரதேசத்திற்குச் சென்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவ் ஆகியோரை சந்தித்து சென்னையில் 22ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். இதனிடையே, அப்துல்லா எம்.பி, அமைச்சர் பொன்முடி ஆகியோர் கொண்ட குழு கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இந்த நிலையில், திமுக எம்.பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, கே.என்.நேரு மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் இன்று (13-03-25) டெல்லியில் உள்ள தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து சென்னையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர். அதன் பின்னர், கனிமொழி எம்.பி, அமைச்சர் கே.என்.நேரு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது பேசிய ரேவந்த் ரெட்டி, “தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்புக்கு என்னுடைய வாழ்த்துகள். தொகுதி மறுசீரமைப்பு ஆபத்தை உணர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முன்னெடுப்பை செய்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு முழு ஆதரவு கொடுக்கிறேன். மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை ஏற்க மாட்டோம். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தென் மாநிலங்களுக்கு எதிரானது. நடக்கப்போவது தொகுதி மறுசீரமைப்பு அல்ல; மாறாக தென்னிந்தியாவின் தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கை. இந்தியாவின் அதிகமான வரி வருவாயை வடமாநிலங்களை விட தென்னிந்திய மாநிலங்கள் தான் நாட்டுக்கு வாரி வழங்கி வருகின்றன. காங்கிரஸ் மேலிட அனுமதி பெற்று 22ஆம் தேதி நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பேன்” என்று கூறினார்.