தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி கூடும் எனத் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், இன்று (09.10.2023) காலை 10 மணிக்கு கூடியது. தொடர்ந்து கேள்வி, பதில் விவாதம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானத்தை தமிழக முதல்வர் முன்மொழிந்து உரையாற்றினார். பின்னர் தனித்தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவையும் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டவையும் தீர்த்தமானதில் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து விவாதமானது சூடுபிடிக்கத் தொடங்கியது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ''இனி நீருக்காக பேச்சுவார்த்தைக்கு செல்வது நம்முடைய உரிமையை அடகு வைப்பதற்கு சமம். நம்முடைய அறியாமையின் அடையாளம். தற்கொலைக்கு சமமானது'' என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ''தற்கொலைக்கு சமம் என அவர் சொன்னது சரியான வார்த்தை அல்ல. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியோடு ஏன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்'' என கேள்வி எழுப்பினார். மேலும் ''இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கும் நிலையில் கர்நாடகாவில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் காவிரி குறித்து தமிழக முதல்வர் பேசியிருக்கலாம். காவிரி விவகாரத்தில் அதிமுகவிடம் இருந்த துணிச்சல் திமுக அரசுக்கு இல்லை'' என தெரிவித்தார். அதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் துணிச்சல் பற்றி எங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பாடம் எடுக்க வேண்டாம்'' என்றார்.
இப்படியாக காரசார விவாதங்கள் நடந்து வருகிறது.