Skip to main content

பிரதமரும், ஜனாதிபதியும் ஏன் வரவில்லை? ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

Published on 12/02/2018 | Edited on 12/02/2018


 

anna arivalayam

 


தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.  இது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (11-02-2018) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

 

 குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் திறந்து இருக்கிறார்களே?

 உச்ச நீதிமன்றத்தினால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, 4 ஆண்டுகால சிறை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட முதல் குற்றவாளியான ஜெயலலிதா அவர்கள் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவோடு பெங்களூர் சிறையில் இருந்திருப்பார். ஏற்கனவே, அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு விழாக்களில் அவரது புகைப்படங்களை வைக்கக்கூடாது என்று எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து, அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெறவிருக்கின்ற நிலையில், தங்களுடைய நோக்கத்துக்கு எதிராக தீர்ப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவசர அவசரமாக அம்மையார் ஜெயலலிதா அவர்களின் படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைத்திருக்கின்றனர். இதுகுறித்து, ஏற்கனவே நான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளேன். சபாநாயகர் என்பவர் சட்டமன்றத்தின் அவையின் மரபை பாதுகாக்க வேண்டியவர். தடைசெய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகளின் ஒத்துழைப்போடு, மாமூல் வாங்கிக் கொண்டு, அரசின் ஒத்துழைப்போடு விற்கப்படுகிறது என்ற செய்தியை சட்டமன்றத்தில் நாங்கள் எடுத்துச் சொன்னபோது, ஆதாரமாக குட்காவை சட்டமன்றத்தில் எடுத்துக் காட்டியபோது, அதில் எந்த தவறும் இல்லாதபோதும், எங்களை அவையில் இருந்து வெளியேற்றினார். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அப்போது நாங்கள் அவையை மீறியதாக சொல்லும் அவர், இன்றைக்கு அவை மரபை மீறியுள்ளார் என்பது தான் எங்களுடைய குற்றச்சாட்டு. இன்று எங்களுடைய மூத்த வழக்கறிஞர் வில்சன்  படத்திறப்பு விழா தொடர்பாக நீதிமன்றத்தில் அளித்துள்ள மனு நாளை நீதிமன்ற விசாரணைக்கு வரவிருக்கிறது.

 

 படத்திறப்பு குறித்து திமுக இதை அரசியலாக்குவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே?

 திமுக மட்டுமல்ல, காங்கிரஸ், சிபிஎம், தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்த்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, படத்தை திறந்து வைக்க வேண்டுமென்று பிரதமர் மோடி, மேதகு ஜனாதிபதி அவர்கள் மற்றும்  தமிழக ஆளுநர்  ஆகியோரை அணுகியும், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு சட்டமன்றத்தில் படம் திறப்பது தவறு, எனவே வரமாட்டோம் என்று அத்துணை பேருமே சொன்ன பிறகுதான் அவசர அவசரமாக சபாநாயகர் மூலம் திறந்து இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில், மீன் வளத்துறை அமைச்சராக உள்ள ஜெயக்குமார், சட்டமன்றத்தில் மட்டுமல்ல, பாராளுமன்றத்திலும் படத்தை திறப்போம் என்று சொல்லி இருக்கிறார். அப்படியெனில், இன்று பிரதமரும், ஜனாதிபதியும் வரவில்லை என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க வேண்டும்.


 
பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
 
திமுக சார்பில் இதற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கையை சமர்பித்து இருக்கிறது. நேற்று இரவு தொடங்கி இந்த நிமிடம் வரையிலும் இதுகுறித்து முதல் அமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, சந்திக்க நேரம் கேட்டு வருகிறோம், ஆனால், பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் என்ற முறையில் கூட எனக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை.

 

 பட்ஜெட் தாக்கல் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறதே?

 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியுமா, முடியாதா என்பது தெரியவரும்.

சார்ந்த செய்திகள்