இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தார். அவருடன் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவாங்கா ட்ரம்ப், மருமகன் ஜேரட் குஷ்னரும் வந்திருந்தனர். அகமதாபாத் மற்றும் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிபர் ட்ரம்ப்பும், அவரது குடும்பத்தினரும் பங்கேற்றனர். மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய வருகையை நாடே எதிர்பார்க்கிறது என்று பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார். ஆனால், பா.ஜ.க.வில் இருக்கும் சுப்ரமணியசாமி, இந்த வருகையால் இந்தியாவுக்கு எந்தப் பலனும் இல்லை. ராணுவரீதியான ஒப்பந்தங்களால் அமெரிக்காவுக்குத் தான் லாபம் என்று அதிரடியாக சொல்லியிருந்தார்.
இந்தியாவின் தொழில் வர்த்தகத் துறையினரும் ட்ரம்ப்பின் ஒன்றரை நாள் விசிட்டால் பெரியளவில் வணிக முதலீட்டுப் பலன் இல்லை என்றும், அமெரிக்க பொருட்கள் மீதான இந்தியாவின் வரி மட்டும் குறைய வாய்ப்பிருக்கு என்றும் கூறிவருகின்றனர்.
அதேபோல், அமெரிக்க அதிபருக்கான இந்திய குடியரசுத்தலைவர் மாளிகை விருந்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதே மாதிரி அழைப்பை எதிர்பார்த்த துணை முதல்வர் ஓ.பி.எஸ். அப்செட்டாகி விட்டார் என்கின்றனர். எப்படியாவது அழைப்பு வரும்படி செய்ய வேண்டும் என்று டெல்லி தரப்பு மூலம் கடைசி நேரம் வரை கடும் முயற்சி செய்து பார்த்து முடியவில்லை என்று கூறுகின்றனர்.